மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய 15 வயது இந்திய சிறுவன்! வெற்றிக்குப் பிறகு செய்த காரியம் வைரல்
உலகின் முன்னணி செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய 15 வயது இந்திய சிறுவன் வந்தன் அலங்கார் சவாய், வெற்றிக்குப் பிறகு எந்த ஆரவாரமும் இல்லாமல் தூங்கச் சென்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லியைச் சேர்ந்த வந்தன், கேண்டிடேட் மாஸ்டர் (Candidate Master) பட்டம் பெற்றவர். அவரது ரேட்டிங் 2,288 ஆக உள்ள நிலையில், கார்ல்சனின் ரேட்டிங் 2,823. சுமார் 500 புள்ளிகள் வித்தியாசம் இருந்தபோதிலும், தன்னம்பிக்கையுடன் கார்ல்சனை எதிர்கொண்டார் வந்தன்.
ஆகஸ்ட் 18ஆம் தேதி Chess.com தளத்தில் நடைபெற்ற ‘Titled Tuesday’ ஆன்லைன் பிளிட்ஸ் தொடரில் இந்த ஆட்டம் நடைபெற்றது. போட்டியில் பங்கேற்க முதலில் வந்தனுக்கு ஆர்வம் இல்லாத நிலையில், அவரது தாய் மாதுரி வற்புறுத்தி விளையாட வைத்ததாக கூறப்படுகிறது.
ஆட்டத்தின்போது கார்ல்சன் செய்த தவறை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட வந்தன், 50-வது நகர்த்தலில் வெற்றியைப் பதிவு செய்தார்.
ஆனால், உலகின் முன்னணி வீரரை வீழ்த்திய பிறகும் அதை பெரிய சாதனையாக நினைத்து கொண்டாடாமல், தனது பெற்றோரிடமோ பயிற்சியாளரிடமோ கூட சொல்லாமல் வந்தன் தூங்கச் சென்றுள்ளார். பின்னர், தனது மொபைலில் போட்டி முடிவைப் பார்த்த அவரது தந்தைதான், கார்ல்சனை தனது மகன் வீழ்த்தியதை அறிந்துள்ளார்.
இந்த வெற்றி குறித்து வந்தன் கூறுகையில், “இழப்பதற்கு எதுவுமில்லை; வெல்வதற்கு மட்டுமே இருக்கிறது என்ற எண்ணத்தில்தான் விளையாடத் தொடங்கினேன். கார்ல்சன் ஒரு தவறு செய்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி 50-வது நகர்த்தலில் வெற்றி பெற்றேன்” என தெரிவித்துள்ளார்.
கடந்த 7 ஆண்டுகளாக வந்தனுக்கு பயிற்சி அளித்து வரும் குர்பிரீத் பால் சிங்கிற்குக்கூட இந்த வெற்றி மறுநாள்தான் தெரியவந்துள்ளது. “களத்தில் வந்தன் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடுவான்; ஆனால் நிஜ வாழ்க்கையில் மிகவும் அமைதியாக இருப்பான்” என அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவயதிலேயே தனது தாயிடம் செஸ் கற்றுக்கொண்ட வந்தனுக்கு, செஸ் மட்டுமின்றி புத்தகங்கள் வாசிப்பதிலும் அதிக ஆர்வம் உள்ளது. குறிப்பாக வரலாற்றுப் போர்கள் தொடர்பான புத்தகங்களை விரும்பிப் படிப்பதாக கூறப்படுகிறது.
எதிர்காலத்தில் செஸ் விளையாட்டை முழுநேரத் தொழிலாகத் தேர்வு செய்வாரா என்பது தனக்கே தெரியவில்லை எனக் கூறும் வந்தன், வரலாறு அல்லது அரசியல் அறிவியல் படிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது தனது இலக்கு இன்டர்நேஷனல் மாஸ்டர் (IM) பட்டத்தைப் பெறுவதே எனவும் அவர் கூறியுள்ளார்.
உலகின் முன்னணி செஸ் வீரரை வீழ்த்திய பிறகும், எந்தவித ஆரவாரமும் இல்லாமல் தூங்கச் சென்ற 15 வயது சிறுவனின் இந்த எளிமையான அணுகுமுறையே தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

