முடிவுக்கு வந்தது ஜாம்பவானின் சகாப்தம்… 21 ஆண்டு கால்பந்து பயணத்துக்கு விடைகொடுத்தார் மெஸ்ஸி
மெஸ்ஸி என்னும் மாயாஜால கால்பந்தாட்டக்காரனின் பயணம், ஒவ்வொரு கால்பந்து வீரருக்கும் மட்டுமல்ல… ஒவ்வொரு சக மனிதருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியது. கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா பிறந்த அர்ஜென்டினா அணிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அந்த அணியின் 10-ம் எண் ஜெர்சியை அணிந்து, மரடோனாவின் வாரிசாகவே கால்பந்து உலகில் களமிறங்கிய மெஸ்ஸிக்கு, சர்வதேச பயணம் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளையும், ஒரு மிகப்பெரிய லெகஸியையும் சுமக்க வேண்டிய பாரம் மெஸ்ஸிக்கு ஆரம்பத்தில் தாங்க முடியாததாகவே இருந்தது.
தன்னுடைய சிறுவயதிலேயே வளர்ச்சி ஹார்மோன் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மெஸ்ஸிக்கு, தொடர்ந்து மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால், அந்த சிகிச்சைக்கான செலவுகளும் அவரது குடும்பத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருந்தன. உடல் வளர்ச்சி குறைவாக இருந்ததற்காக சக வீரர்களிடமிருந்து ‘புல்கா’ எனப்படும் ‘குள்ளன்’ என்ற கேலிக்கும் அவர் ஆளானார். “இவரால் எங்கே சாதிக்க முடியும்?” என்ற விமர்சனங்களும் அவரைச் சுற்றி எழுந்தன. ஆனால் அந்த விமர்சனங்கள் அனைத்தையும் தனது கால்களால் பதில் சொல்லி உடைத்தெறிந்தார் மெஸ்ஸி.
பார்சிலோனா அணிக்காக களமிறங்கிய பிறகு, மெஸ்ஸியின் கால்பந்து உலகம் முற்றிலும் மாறியது. தனது அபாரமான டிரிப்ளிங், துல்லியமான பாஸ்கள், அசாத்தியமான கோல் அடிக்கும் திறன் என கால்பந்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார். பார்சிலோனா அணிக்காக 600-க்கும் மேற்பட்ட கோல்களை அடித்து, ஏராளமான கோப்பைகளை வென்று கொடுத்த மெஸ்ஸி, உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தினார்.
தனது தனிப்பட்ட திறமைக்கும் சாதனைகளுக்கும் கிடைத்த அங்கீகாரமாக, உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலூன் டி’ஓர் விருதை பலமுறை வென்றார். 2012-ம் ஆண்டில் ஒரே காலண்டர் ஆண்டில் 91 கோல்கள் அடித்து புதிய சாதனையையும் படைத்தார். கிளப் கால்பந்தில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் தொடர்ந்து சாதனைகளை குவித்த மெஸ்ஸி, கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக உருவெடுத்தார்.
ஆனால், இத்தனை சாதனைகளையும் படைத்த மெஸ்ஸியின் மனதில் மட்டும் ஒரு மிகப்பெரிய குறை இருந்து கொண்டே இருந்தது. அது… உலகக்கோப்பை.
2014-ம் ஆண்டு உலகக்கோப்பையில் அர்ஜென்டினா அணியை இறுதிப்போட்டிவரை அழைத்துச் சென்றார் மெஸ்ஸி. ஆனால், இறுதிப்போட்டியில் ஜெர்மனியிடம் ஏற்பட்ட தோல்வி அவரது உலகக்கோப்பை கனவை மீண்டும் தள்ளிப்போட்டது. அதன்பிறகு 2016 கோபா அமெரிக்கா இறுதிப்போட்டியிலும் அர்ஜென்டினா தோல்வியடைந்தது. தொடர்ந்து ஏற்பட்ட இந்த ஏமாற்றங்களால் மனமுடைந்த மெஸ்ஸி, சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஆனால், மெஸ்ஸியின் கதை அங்கே முடியவில்லை. அர்ஜென்டினா ரசிகர்களின் அன்பும், நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற அவரது விருப்பமும் அவரை மீண்டும் தேசிய அணிக்கு அழைத்துவந்தது. அதன்பிறகு மெஸ்ஸியின் சர்வதேச பயணம் புதிய உச்சத்தை எட்டியது. 2021-ல் கோபா அமெரிக்கா கோப்பையை வென்ற அர்ஜென்டினா, மெஸ்ஸியின் தலைமையில் தனது நீண்டகால கோப்பை வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
அதன் உச்சமாக 2022-ம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை வந்தது. பல ஆண்டுகளாக மெஸ்ஸியை துரத்திக்கொண்டிருந்த உலகக்கோப்பை கனவு, இறுதியாக நனவானது. பிரான்ஸுக்கு எதிரான பரபரப்பான இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியது. உலகக்கோப்பையை கைகளில் ஏந்திய அந்த தருணம், மெஸ்ஸியின் வாழ்க்கையின் மிக உணர்ச்சிகரமான தருணங்களில் ஒன்றாக அமைந்தது.
சிறுவயதில் உடல் வளர்ச்சிக்காக போராடிய சிறுவன்… ‘குள்ளன்’ என கேலி செய்யப்பட்ட வீரன்… உலகின் மிகப்பெரிய கால்பந்து மேடையில் உலகக்கோப்பையை உயர்த்திய கேப்டனாக மாறினார். ஒருகாலத்தில் மெஸ்ஸியால் முடியாது என விமர்சித்தவர்களே, பின்னர் அவரை கால்பந்து வரலாற்றின் தலைசிறந்த வீரர் என கொண்டாடும் நிலை ஏற்பட்டது.
2005 ஆகஸ்ட் 17 அன்று ஹங்கேரிக்கு எதிரான நட்புரீதியான போட்டியில் தனது 18-வது வயதில் அர்ஜென்டினா தேசிய அணிக்காக அறிமுகமான மெஸ்ஸி, அடுத்த இரண்டு தசாப்தங்களில் அந்த அணியின் முகமாகவும், நம்பிக்கையாகவும் மாறினார். அவரது கால்களில் இருந்து பிறந்த எண்ணற்ற கோல்கள், அசாத்தியமான டிரிப்ளிங்குகள், மேஜிக் பாஸ்கள் மற்றும் மறக்க முடியாத தருணங்கள், பல தலைமுறை கால்பந்து ரசிகர்களின் நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும்.

