குடியரசுத் தலைவரின் மெய்க்காப்பாளர் முதல் ‘National Crush’ வரை… ராணுவத்தை விட்டு விலகிய மேஜர் ரிஷப்!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் மெய்க்காப்பாளராகப் பணியாற்றி இணையத்தில் பிரபலமான மேஜர் ரிஷப் சிங் சம்ப்யால், இந்திய ராணுவத்தில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெற்றிருப்பது தற்போது கவனம் பெற்றுள்ளது. குடியரசுத் தலைவருடன் அவர் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. குறிப்பாக அவரது மிடுக்கான தோற்றம் மற்றும் குடியரசுத் தலைவருடன் பணியாற்றிய விதம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தது.

இதன் காரணமாக சமூக வலைதளங்களில் ரிஷப் சிங் சம்ப்யாலுக்கு தனி ரசிகர் பட்டாளமும் உருவானது. அவருக்கு ‘National Crush’ என்ற பெயரும் பிரபலமானது. கடந்த 2013ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் தனது பணியைத் தொடங்கிய அவர், பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். 2021ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் கேப்டனாக இருந்த ரிஷப் சிங் சம்ப்யால், ஜாட் ரெஜிமென்ட் அணிவகுப்புக் குழுவை வழிநடத்தினார். அந்த அணிவகுப்புக் குழு சிறந்த அணிவகுப்புக் குழுவுக்கான விருதையும் வென்றது.

பின்னர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் மெய்க்காப்பாளர் பொறுப்பை ஏற்ற ரிஷப் சிங் சம்ப்யால், அந்தப் பணியை நிறைவு செய்த பிறகு மீண்டும் ராணுவப் பணிக்குத் திரும்பினார். இந்நிலையில், தனது பணிக்காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே இந்திய ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெறும் முடிவை அவர் எடுத்துள்ளார். சுமார் 12 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய நிலையில், தற்போது தனது ராணுவப் பயணத்திற்கு அவர் விடை கொடுத்துள்ளார்.

ரிஷப் சிங் சம்ப்யால் விருப்ப ஓய்வு பெற்றதற்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. தனிப்பட்ட மற்றும் குடும்ப காரணங்களை கருத்தில்கொண்டே அவர் இந்த முடிவை எடுத்ததாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான விரிவான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ராணுவப் பணியில் இருந்து விலகியுள்ள மேஜர் ரிஷப் சிங் சம்ப்யாலின் அடுத்தகட்ட பயணம் என்னவாக இருக்கும் என்பது தற்போது அவரது ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளப் பயனர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது அடுத்தகட்ட முயற்சிகள் சிறக்க வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *