கட்சியில் இருந்து விலகிய நடிகை …
அதிமுகவின் கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளரும் நடிகையுமான கவுதமி, அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் விடுத்துள்ள கடிதத்தில், “இன்று 14/06/2026 முதல் நான் வகித்து வரும் அஇஅதிமுக அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் கழக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் பதவியில் இருந்தும், தற்போது உள்ள அரசியல் சூழலை கருத்தில் கொண்டு, நான் சமூக சேவை செய்ய ஏதுவான வகையில் கனத்த இதயத்துடன் என்னை விடுவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும், கழகத்தில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை எனக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய முன்னாள் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், பிற அணி மாநிலச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், வட்டக் கழகச் செயலாளர்கள், பகுதி கழகச் செயலாளர்கள், ஒன்றியக் கழகச் செயலாளர்கள், பேரூர் மற்றும் நகரக் கழகச் செயலாளர்களையும் மனதார வணங்கி நன்றி கூறி, என்னை கழகத்திலிருந்து விடுவித்துக் கொள்வதாகவும் கவுதமி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

