சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் அல்ல: மத்திய அமைச்சர் விளக்கம் : தொலைத்தொடர்புத் துறையின் உத்தரவே சர்ச்சைக்கு காரணம்
மத்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) அறிமுகப்படுத்திய சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) செயலி நாடு முழுவதும் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. புதியதாக தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் இந்த செயலியை முன்பே நிறுவி, அதை நீக்க முடியாத வகையில் வைத்திருக்க வேண்டும் என்ற தொலைத்தொடர்புத் துறையின் நவம்பர் 28-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவே சர்ச்சைக்கு வழிவகுத்தது.
இந்த உத்தரவின்படி, 90 நாளில் அமல்படுத்தவும், 120 நாளில் அறிக்கை சமர்ப்பிக்கவும் மொபைல் உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது இணையப் பாதுகாப்பையும், ஸ்பேம் தடுப்பையும் வலுப்படுத்தும் நடவடிக்கை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் செயலி கட்டாயம் எனும் விமர்சனங்கள் அதிகரித்த நிலையில், மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய போது, “சஞ்சார் சாத்தி செயலி பயனர்களுக்கு கட்டாயம் அல்ல; விரும்பாதவர்கள் அதை நீக்கிக் கொள்ளலாம்” என்று விளக்கம் வழங்கினார்.
சிந்தியா மேலும், இந்த செயலி மூலம் இதுவரை 1.75 கோடிக்கும் மேற்பட்ட போலி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், 20 லட்சம் திருடப்பட்ட போன்கள் கண்காணிக்கப்பட்டு, 7.5 லட்சம் சாதனங்கள் உரிமையாளர்களிடம் திருப்பி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதற்கிடையில், செயலி தனியுரிமையை மீறும் வகையில் செயல்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளன. அழைப்புகள், செய்திகள், கேமரா, படங்கள் உள்ளிட்ட பல அனுமதிகள் செயலியில் தேவைப்படுவதால் இது “டிஜிட்டல் சர்வாதிகாரம்” என விமர்சித்துள்ளனர்.
சஞ்சார் சாத்தி செயலி திருடப்பட்ட மொபைல் கண்காணிப்பு, சந்தேக அழைப்புகளை புகாரளிக்கும் வசதி, பயனர் பெயரில் உள்ள மொபைல் இணைப்புகளை சரிபார்ப்பு போன்ற பல பாதுகாப்பு சேவைகளை வழங்குகிறது. இந்த செயலி தற்போது கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது.

