உலகை உலுக்கிய விபத்து…
260 பேரை பலி கொண்ட அகமதாபாத் விமான விபத்தின் முதலாமாண்டு நினைவு தினம் ஜூன் 12ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி, குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா ஏஐ-171 விமானம் சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. அந்த விமானம் அருகிலிருந்த மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தில் பயணித்த 241 பேர் உட்பட 260 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்திலிருந்து விஸ்வாஸ் குமார் ரமேஷ் (39) என்பவர் மட்டும் உயிர் பிழைத்தார். விபத்து நடந்த இடத்திலிருந்து ரத்தம் தோய்ந்த சட்டையுடனும், கையில் செல்போனுடன் அவர் நடந்து வரும் வீடியோ அப்போது இணையத்தில் வைரலானது.
இந்தியாவை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகத்தையும் உலுக்கிய இந்த விபத்து நடந்து ஓராண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அகமதாபாத்தில் பல இடங்களில் அஞ்சலி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

