வடபழனி – பூந்தமல்லி இடையே பிப்ரவரிக்குள் மெட்ரோ ரயில்கள் இயக்கம்!
வடபழனி – பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்கான இறுதிக்கட்ட ஒப்புதலை இந்திய ரயில்வே வாரியம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் தற்போது சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை இரு வழித்தடங்களில் செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் மூன்றாவது வழித்தடமாக மெரீனா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை 26 கிலோமீட்டர் தொலைவிற்கு மெட்ரோ பாதை அமைக்கும் பணியை மேற்கொண்டது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, வடபழனி முதல் பூந்தமல்லி வரை 16 கிலோமீட்டர் தொலைவிலான மெட்ரோ பாதை அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இப்பாதையில் தேவையான சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு, தொழில்நுட்ப சான்றிதழும் பெறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வடபழனி – பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்கான பாதுகாப்பு அனுமதி கோரி மத்திய ரயில்வே வாரியத்திற்கு மனு அளிக்கப்பட்டது. தற்போது அந்த மனுவிற்கு ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில், வரும் பிப்ரவரி மாதத்திற்குள் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன. ஆரம்பத்தில் ஓட்டுநருடன் கூடிய ரயில்கள் இயக்கப்படவுள்ள நிலையில், பின்னர் ஓட்டுநர் இல்லா தானியங்கி ரயில்கள் இயக்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

