இலங்கையை சிதறடித்த ‘டிட்வா’ புயல்’
இலங்கைக்கு 950 டன் நிவாரணம் – இன்று ஸ்டாலின் கொடியசைத்து அனுப்புவிப்பு
வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல் இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பதுளை, கண்டி, நுவரெலியா, மாத்தளை உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மழை-வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 700-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மொத்தம் 14 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அத்தியாவசிய தேவைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியர்கள் பலரும் அங்கு சிக்கியிருந்த நிலையில், 300-க்கும் மேற்பட்டோர் விமானப்படை உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த துயர் நிலையைக் கவனத்தில் கொண்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தோருக்கான இரங்கலைத் தெரிவித்ததோடு, இலங்கையில் வாழும் மக்கள், குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு அவசர நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.
அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இன்று (சனிக்கிழமை) சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து மொத்தம் 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்படுகின்றன. சென்னை துறைமுகத்தில் இருந்து புறப்படும் கப்பலை மதியம் 12 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைக்கிறார். அனுப்பப்படும் பொருட்களில் 10,000 போர்வைகள், 10,000 துண்டுகள், 5,000 வேஷ்டிகள், 5,000 சேலைகள், 1,000 தார்பாலின்கள் மற்றும் 650 டன் பருப்பு, சர்க்கரை, பால் பவுடர் அடங்கும். தூத்துக்குடியில் இருந்து கூடுதலாக 300 டன் பருப்பு, சர்க்கரையும் அனுப்பப்படுகிறது.
இலங்கை மக்களின் மீள்வாழ்விற்கு தமிழகத்தின் இந்த உதவி முக்கிய ஆதரவாக அமைகிறது.

