ஜனவரியில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
புதுடெல்லி: தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், கூட்டணியை பலப்படுத்தி ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. தலைமையகம் தீவிர வியூகங்களை வகுத்து வருகிறது. வழக்கமாக தேர்தலுக்கு முன்பு குறைந்தது மூன்று முறை பிரதமர் மாநிலத்திற்கு வருகை தருவார். அந்த வகையில், வருகிற ஜனவரி மாதத்தில் அவரது முதல் தமிழக பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பயணத்தின் போது ராமேசுவரத்தில் நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா, விவசாயிகளை சந்திக்கும் நிகழ்ச்சி மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொள்ளும் யாத்திரையின் நிறைவு விழா ஆகிய மூன்று முக்கிய நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் காசி தமிழ் சங்கம விழாவை இந்த மாத இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பிரதமரின் வருகை உறுதி செய்யப்பட வேண்டியதால், அந்த விழா தற்போது ஒத்திவைக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும், காசி தமிழ் சங்கம விழா நடைபெறும் நாளிலேயே மற்ற இரண்டு நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்து நடத்தலாமா என்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
அவ்வாறு ஒரே நாளில் ஏற்பாடு செய்யப்பட்டால், மூன்று நிகழ்ச்சிகளிலும் பிரதமர் ஒருசேர கலந்து கொள்வார். இல்லையெனில், யாத்திரை நிறைவு விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கச் செய்து, மீதமுள்ள இரண்டு நிகழ்ச்சிகளை பிரதமருக்காக ஒரே நேரத்தில் நடத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த காரணங்களாலேயே நிகழ்ச்சிகளின் தேதி அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், ஓரிரு நாட்களில் இறுதி தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

