வலுவான எதிரிகள் வேண்டும்! – விஜய் அரசியல் சவால்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் தவெக (TVK) தலைவருமான விஜய், தனது ரசிகர்கள் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். நீண்ட ஆண்டுகளாக தன்னைத் தொடர்ந்து ஆதரித்து வரும் ரசிகர்களுக்காகவே தனது எதிர்கால முடிவுகள் அனைத்தும் என அவர் தெரிவித்தார்.
“முதல் நாளிலிருந்து என்னோடு தொடர்ந்து நிற்பவர்கள் என் ரசிகர்கள்தான். ஒரு நாள், இரண்டு நாள் அல்ல; கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் என்னோடு இருந்துள்ளனர். அதனால் அடுத்த 30 அல்லது 33 ஆண்டுகளுக்கும் அவர்களோடு நான் நிற்க முடிவு செய்துள்ளேன். நாளை அவர்களுக்கு ஏதாவது நடந்தால், அவர்களின் வீட்டிற்கே சென்று நிற்கவும் நான் தயாராக இருக்கிறேன்,” என விஜய் கூறினார்.
தன்னை ஆதரிக்க பலவற்றை துறந்த ரசிகர்களுக்காக, தான் சினிமாவையே விட்டுக்கொடுக்கத் தயார் என்றும் அவர் தெரிவித்தார். “எனக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்த என் ரசிகர்களுக்காக, நான் சினிமாவையே விட்டுக்கொடுக்கிறேன். இந்த விஜய் சும்மா ‘நன்றி’ என்று சொல்லிவிட்டு போகும் மனிதன் அல்ல. என் நன்றிக்கடனை தீர்த்துவிட்டுத்தான் போவேன்,” என அவர் உறுதியுடன் கூறினார்.
மேலும், வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் குறித்து பேசிய விஜய், “வாழ்க்கையில் முன்னேற நண்பர்களைவிட வலுவான எதிரிகள் தேவை. சும்மா வருவோர் போவோரை எல்லாம் எதிரியாக நினைக்க முடியாது. வலுவானவரை எதிர்க்கும்போதுதான் நம்மிடம் வெற்றி பெறும் வலிமை உருவாகும்,” என தெரிவித்தார்.
அரசியல் பயணத்தைப் பற்றிய கேள்விகளுக்கும் பதிலளித்த அவர், “விஜய் தனியாக வருவாரா, அணியாக வருவாரா என்று அடிக்கடி கேட்கிறார்கள். நாம் எப்போது தனியாக வந்தோம்? 33 ஆண்டுகளாக அணியாகத்தானே வந்திருக்கிறோம். இப்போதும் விளக்கம் போதவில்லை என்று சிலர் சொல்வார்கள். ஆனால் சஸ்பென்ஸில்தான் உண்மையான ‘கிக்’ இருக்கும்,” என்று கூறினார்.
விஜயின் இந்த உரை, அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், அவரது எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

