சட்டப்பேரவையில் திடீரென நிறுத்தப்பட்ட நேரலை…

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. தொடர்ந்து, இரண்டாவது நாளான இன்று, காவிரியில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் முதல்வர் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானம் தவெக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பான்மை கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், சட்டப்பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சட்டப்பேரவை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளன. இதுகுறித்து அதிமுக தனது எக்ஸ் தளப் பதிவில், “ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. முழு நேரலை… முழு நேரலை… அத்தனையும் உருட்டா சார்! ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம். எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றும் ஐடியாவே இல்ல போல; அப்படித்தானே சார்?” என கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டப்பேரவை நேரலை நிறுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மீது அவ்வளவு பயமா, முதல்வரே?” என கேள்வி எழுப்பியுள்ளது.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இதுகுறித்து பேசுகையில், “மக்கள் வரிப்பணத்தில்தான் சட்டப்பேரவை நடைபெறுகிறது. எனவே, மக்கள் அதை நேரலையில் பார்ப்பதில் என்ன தவறு?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “சட்டப்பேரவை நேரலையில் ஒளிபரப்பப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது. இதை அவைத்தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *