G7 மாநாடு – அடுத்தடுத்து நடந்தவைகள்:

G7 மாநாட்டில், இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி புகைப்படம் எடுக்கக் கெஞ்சியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருப்பது உலக அளவில் பேசுபொருளாகி உள்ளது.

தொலைக்காட்சி சேனலான La7-க்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப் இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்த ஒளிபரப்பு நிறுவனத்தின் மொழிபெயர்ப்பின்படி, “நான் அவரிடம் பேசியதில் அவர் அநேகமாக மகிழ்ச்சியாக இருப்பார். நான், அவரிடம் பேச வேண்டிய அவசியம் இருக்கவில்லை.

அவர், என்னுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளும்படி கெஞ்சினார். அவர், என்னுடன் ஒரு புகைப்படம் எடுக்க மிகவும் விரும்பினார். நான் அதை எடுத்திருக்க மாட்டேன். ஆனால், அவர் மீது எனக்குப் பரிதாபமாக இருந்தது” என்று அவர் கூறியதாக La7-இன் மொழிபெயர்ப்பு தெரிவிக்கிறது.

ஆனால், இதுகுறித்து அந்தத் தொலைக்காட்சி, நேர்காணலின் மொழிமாற்றம் செய்யப்பட்ட பதிப்பை மட்டுமே வெளியிட்டது, அதன் அசல் ஆடியோவை வெளியிடவில்லை.

என்றாலும் கூட இதற்க்கு பதிலளித்த மெலோனி “டொனால்டு ட்ரம்பின் கூற்றுகள் முற்றிலும் புனையப்பட்டவை. நான் வெளிப்படையாகவே திகைத்துப்போனேன்.

அமெரிக்க அதிபர் ஏன் தனது நட்பு நாடுகளிடம் இப்படி நடந்துகொள்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. மேலும், இது முதல்முறையல்ல. மேற்கத்திய மற்றும் அமெரிக்காவின் எதிரிகளிடம் அவர் அதே உறுதியைக் காட்டாமல், மாறாக அவர்களின் தலைவர்களை மிகுந்த மென்மையுடன் நடத்துவது ஏமாற்றமளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் இத்தாலி சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, “தாம் இந்தியாவிலிருந்து உங்களுக்கு பரிசு ஒன்று வாங்கி வந்திருக்கிறேன்” என்று கூறி, மெலோனிக்கு மெலோடி சாக்லெட் கொடுத்தார். இது, வைரலாகியது. இந்த நிலையில், 52-ஆவது ஜி7 உச்சி மாநாடு பிரான்ஸில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக இந்தியப் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அந்த மாநாட்டில், பல நாட்டுத் தலைவர்களும் குழு புகைப்படம் எடுக்க ஒன்றாக அணிவகுத்தனர். அப்போது மெலோனியும், பிரதமர் மோடியும் ஒருவரை ஒருவர் சந்தித்து கைகுலுக்கி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

அப்போது அங்கே பதிவான வீடியோவில் பிரதமர் மோடி, “சமூக வலைத்தளத்தில் நாம் இருவரும் அதிகம் பேசப்படுகிறோம்” என்பது போன்ற கருத்தை அவர் கூற, அதனைக் கேட்ட இத்தாலி பிரதமர், “ஆமாம், நாம்தான் இன்ஸ்டாகிராமில் மிகப் பிரபலமான ஜோடி” என்று கூறி சிரிப்பது பதிவாகியிருக்கிறது. இந்த வீடியோதான், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *