பிரதமர் நரேந்திர மோடியுடன் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடியுடன் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு – உத்திரபிரதேசம் மாநில வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ள நிலையில் இன்று சந்திப்பு
டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க் சாலையில் அமைந்துள்ளது பிரதமர்களுக்கான அதிகாரப்பூர்வ அரசு மாளிகை. அங்கு இன்று பிரதமர் நரேந்திர மோடியை உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் சந்தித்து சுமார் ஒரு மணி நேரங்களுக்கு மேல் நீண்ட ஆலோசனையை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையின் போது உத்திரபிரதேச மாநிலத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள கங்கா விரைவு சாலை உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடியை நேரில் அழைத்ததாக தகவல்கள் வருகிறது. இருப்பினும் நாளை உத்திர பிரதேச மாநிலத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடவுள்ள நிலையில் இது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் முந்தைய வரைவு வாக்காளர் பட்டியலின்படி 12.55 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. உத்திரபிரதேசம் மாநிலத்தின் உள்ளாட்சித் தேர்தல் அதனை தொடர்ந்து 2027ல் சட்டமன்றத் தேர்தல் என அடுத்தடுத்த தேர்தல்களை உத்தரப்பிரதேசம் மாநிலம் சந்திக்கவுள்ள நிலையில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம் எனும் செய்தி ஏற்கனவே உத்தரபிரதேச அரசியலில் பேசும் பொருளாகியுள்ளது. இந்நிலையில் பிரதமர் உடனான உத்தரப்பிரதேச முதலமைச்சரின் சந்திப்பு கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.

