அஜித் ரசிகர்கள் தொடங்கிய புதிய அரசியல் கட்சி! தமிழக மக்கள் கழகம் உதயம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் இடையே நீண்டகாலமாக ரசிகர்கள் மத்தியில் போட்டி நிலவி வந்தாலும், இருவரும் தனிப்பட்ட முறையில் நல்ல நட்புடன் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சினிமாவை விட்டு விலகி அரசியலில் களமிறங்கிய விஜய், தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சி செய்து வரும் நிலையில், நடிகர் அஜித்தும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது எழுந்து வருகிறது. ஆனால், அரசியலில் ஆர்வம் காட்டாத அஜித், நடிப்பு மற்றும் கார் பந்தயத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.
அஜித் ரசிகர்கள் தொடங்கிய கட்சி
இதற்கிடையே, அஜித் ரசிகர்கள் இணைந்து புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டையில், “தமிழக மக்கள் கழகம்” என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது.
கட்சியின் கொடியில் மஞ்சள், வெள்ளை, சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்கள் இடம்பெற்றுள்ளன. கொடியின் நடுவில் இரண்டு சிறுத்தைகள் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்சியின் மாநில தலைவராக ஆபித், மாநில செயலாளராக ராம்குமார், மாநில பொருளாளராக முகமது ஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அஜித் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் தொடரும் நிலையில், அவரது ரசிகர்கள் தனியாக அரசியல் கட்சி தொடங்கியிருப்பது தற்போது கவனம் பெற்றுள்ளது.

