இடியாப்பம் விற்பனைக்கு இனி உரிமம் கட்டாயம்
சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்யும் வியாபாரிகள், இனி உரிய உரிமம் பெற்ற பின்னரே விற்பனை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
உணவின் தரம் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த உரிமத்தை ஆன்லைன் மூலம் இலவசமாக பெறலாம் எனவும் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெறப்படும் உரிமம் ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் தரமற்ற இடியாப்பங்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்ற புகார்கள் மற்றும் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, அவற்றைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
விதிமுறைகளை பின்பற்றாத வியாபாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துறை எச்சரித்துள்ளது.

