ஆசிரியர்களின் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவளித்த LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்
புதுச்சேரி அரசு பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள், கவுரவ பட்டதாரி ஆசிரியர்கள், கவுரவ பட்டதாரி மொழி ஆசிரியர்கள், கவுரவ பாலசேவிகாக்கள் என 292 ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி கடந்த 21ம் தேதி முதல் புதுச்சேரி அரசின் பள்ளி கல்வித்துறை வளாகத்தில் காலவரையற்ற தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று 8வது நாளாக ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனத்தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் கல்வித்துறை வளாகத்திற்கு நேரில் சென்று ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
அப்போது ஆசிரியர்களின் போராட்டத்திற்கு லட்சிய ஜனநாயக கட்சி தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்றும், விரைவில் பணி நிரந்தரம் செய்ய புதுச்சேரி அரசை லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் வலியுறுத்துவதாகவும் அவர் உறுதி அளித்தார்.

