புதுச்சேரியை உலக வரைபடத்தில் முன்னணி நகரமாக மாற்றுவதே இலக்கு – ஜோஸ் சார்லஸ் மார்டின்
புதுச்சேரி:
புதுச்சேரியில் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை என்றும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தான் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளதாக லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்தார்.
பாண்டி மெரினா கடற்கரையில் நடைபெற்ற லட்சிய ஜனநாயக கட்சியின் தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், புதுச்சேரியில் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் நிலவி வருவதாகக் குறிப்பிட்டார். குடிநீர் தட்டுப்பாடு, மருத்துவத்துறையில் ஊழல் உள்ளிட்ட பல குறைகளுக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளது என அவர் கூறினார்.
மேலும், புதுச்சேரியை உலக வரைபடத்தில் முன்னணி நகரமாகவும், இந்திய வரைபடத்தில் முக்கிய இடத்தைப் பெறும் மாநிலமாகவும் மாற்றுவதே தனது இலக்கு என தெரிவித்தார். புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும், இதற்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்றும் குற்றம்சாட்டினார்.
புதுச்சேரி கிரிக்கெட் அணியில் புதுச்சேரியைச் சேர்ந்த வீரர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், அரசால் கட்டி முடிக்கப்பட்ட பல கட்டிடங்கள் திறக்கப்படாமல் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஏழை எளிய மக்களுக்கு உதவுவதே தனது முதன்மை இலட்சியம் என்றும், இளைஞர்கள் அரசியலில் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்றும் ஜோஸ் சார்லஸ் மார்டின் அழைப்பு விடுத்தார். புதுச்சேரியை சிங்கப்பூர் போல வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற்றுவதே கட்சியின் எண்ணம் எனவும் அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சி முடிவில், தொடக்க விழாவில் பங்கேற்ற அனைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், விழா தேசிய கீதத்துடன் இனிதே நிறைவடைந்தது.

