போலி மருந்து விவகாரத்தில் சிபிஐ விசாரணை அவசியம் – சார்லஸ் மார்டின் பேட்டி
புதுச்சேரி:
புதுச்சேரியில் கடல் சார்ந்த வரலாறு மற்றும் மீனவர் சமூகத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், லட்சிய ஜனநாயக கட்சியின் கொடி கடலில் அறிமுகப்படுத்தப்பட்டது. மீனவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கத்துடன் இந்த நிகழ்வு நடைபெற்றதாக கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், புதுச்சேரியில் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் இருப்பதாகக் கூறினார். குறிப்பாக, போலி மருந்து விவகாரத்தில் பல முக்கிய புள்ளிகள் தொடர்பில் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இதற்கு சிபிஐ விசாரணை அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
“எவ்வளவு தடைகள் வந்தாலும் அதை கடந்து சென்றால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்” என கூறிய சார்லஸ் மார்டின், அரசியல் வெறுப்பு அரசியலாக மாறக் கூடாது என்றும், சுயநலமின்றி பொதுநலத்துடன் செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரிவித்தார். மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் பலர் அரசியலுக்கு வருகிறார்கள்; ஆனால் தற்போதைய அரசியல் சூழல் அவர்களை மாற்றி விடுகிறது என்றும் அவர் கூறினார்.
புதுச்சேரி கடந்த 30 ஆண்டுகளாக வளர்ச்சியில் பின்தங்கி உள்ளது என குற்றம்சாட்டிய அவர், குடிநீர் தட்டுப்பாடு, மருத்துவத் துறையில் ஊழல், பாதுகாப்பற்ற சூழல் போன்றவை நிலவி வருவதாக சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக பல தொழிற்சாலைகள் புதுச்சேரிக்கு வர அஞ்சுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
“ஊழல் தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆணி வேர். அதன் காரணமாகவே பல அரசுத் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. நான் ஊழல் செய்பவர்களை யாராக இருந்தாலும் எதிர்ப்பேன்” என அவர் கடுமையாக தெரிவித்தார். அரசியலுக்கு வந்துவிட்டதால், எந்த பிரச்சினை வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
போலி மருந்து விவகாரத்தில் எத்தனை எஸ்.ஐ.டி. குழுக்கள் அமைத்தாலும், வெளிப்படைத்தன்மை அவசியம் என்றும், அதற்கு சிபிஐ விசாரணை மட்டுமே உண்மையை வெளிக்கொண்டு வரும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், புதுச்சேரி அரசியல் சூழல் குறித்து நடிகர் விஜய் புரிதல் இல்லாமல் பேசியுள்ளதாகவும், அது குறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்ததாகவும் சார்லஸ் மார்டின் கூறினார்.

