மும்மத வழிபாட்டுடன் லட்சிய ஜனநாயக கட்சி தொடக்கம் – ஜோஸ் சார்லஸ் மார்டின் பிரார்த்தனை
புதுச்சேரி:
புதுச்சேரியில் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட உள்ள லட்சிய ஜனநாயக கட்சியின் தொடக்கத்திற்கு முன்பாக, கட்சியின் நிறுவனர் மற்றும் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் மும்மத வழிபாடுகளை மேற்கொண்டு பிரார்த்தனை செய்தார்.
பிள்ளையார் சுழி போட்டு அரசியல் பயணத்தை தொடங்கும் வகையில், அவர் முதலில் புதுவை மணக்குள விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, புதுவை தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் பிரார்த்தனை செய்து, அமைதி, மக்கள் நலம் மற்றும் நல்லாட்சிக்காக வேண்டுதல் செய்தார்.
அதேபோல், ஹம்ரத் சையத் அஹமத் மௌலா சாஹிப் வலியுல்லாஹ் தர்காவிலும் ஜோஸ் சார்லஸ் மார்டின் பிரார்த்தனை மேற்கொண்டார். லட்சிய ஜனநாயக கட்சியின் கொடி மற்றும் கொள்கை அறிமுகம் இன்னும் சில நேரங்களில் நடைபெற உள்ள நிலையில், மும்மத வழிபாடுகள் மூலம் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.
“எம் மதமும் சம்மதம்” என்ற கொள்கையை வலியுறுத்தும் வகையில், மத ஒற்றுமை, மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு கட்சி செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சிய ஜனநாயக கட்சியின் கொடி மற்றும் கொள்கை அறிமுக நிகழ்வு புதுச்சேரி அரசியல் களத்தில் புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

