கள்ளத்தனமாக லாட்டரியை விற்க திமுக நிர்பந்தம் – L J K தலைவர் குற்றச்சாட்டு
தேர்தல் பத்திரம் மூலமாக மார்டின் குழுமத்திடம் 500 கோடி ரூபாய் பெற்ற திமுக, தமிழ்நாட்டில் கள்ளத்தனமாக லாட்டரியை புழக்கத்தில் விடுமாறு கூறியதாக , பிரபல தொழிலதிபர் மார்டினின் மகனும், லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் சார்லஸ் மார்டின் கூறியதாவது ” அரசியல் கட்சிகளுக்கு தொழில் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்குவது சட்டபூர்வமாக இருந்த காலத்தில் எனது தந்தையை அணுகிய ஆதவ் அர்ஜூனா 500 கோடி ரூபாயை பெற்று திமுகவிடம் வழங்கினார். தேர்தலுக்கு முன்பு இனி அமையப்போவது உங்கள் அரசு எனக் கூறியது. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு லாட்டரியை சட்டப்பூர்வமாக அனுமதிப்பதற்கு பதிலாக கள்ளத்தனமாக விற்பனை செய்துகொள்ளுமாறு திமுக தலைமை எங்களிடம் கூறினர். இதனை நாங்கள் மறுத்தோம். சட்டப்பூர்வமாக மட்டுமே லாட்டரியை விற்பனை செய்வோம் என எனது தந்தை கூறி திமுகவின் கோரிக்கையை மறுத்துவிட்டார்.

அதன்பிறகு டாஸ்மாக் மது விற்பனையை முறைப்படுத்தும் பணியை மார்ட்டின் குழுமம் செய்தால் 30ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்ற திட்டத்தை நாங்கள் அவர்களிடம் கூறினோம். ஆனால் அதனை ஏற்காமல் திமுக நிராகரித்துவிட்டது. டாஸ்மாக் விற்பனையை வேண்டுமென்றே முறைப்படுத்தாமல், தற்போது பாட்டிலுக்கு கூடுதல் பணம் பெறுவது முதல் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்று வருவது அம்பலமாகியுள்ளது.
இதேபோல் மணல் குவாரியை ஏற்று நடத்த திமுக எங்களிடம் கேட்டது, அதற்காக ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் ரொக்க பணமாக தர வேண்டும் எனவும் எங்களிடம் வலியுறுத்தியது. இதற்கு எனது தந்தை மறுத்து அவர்களது கோரிக்கையை நிராகரித்து விட்டார். எந்த தொழிலை செய்தாலும் அதனை சட்டரீதியாக செய்ய வேண்டும் என நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே உறுதியாக இருந்தோம்.” என ஜோஸ் சார்லஸ் மார்டின் கூறியுள்ளார்.
பொதுவெளியில் திமுகவும், அவர்களது குடும்பமும் லாட்டரிக்கு எதிராக இருப்பது போல் காட்டிக்கொள்ளும் நிலையில், இதன் பின்னணியில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வெளிப்படுத்தியிருப்பதுதேர்தல் சூழலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது

