ராமநாதபுரம் அருகே 2000 ஆண்டு பழமையான தமிழி கல்வெட்டு கண்டெடுப்பு

கடலாடி அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தமிழி(தமிழ் பிராமி)கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம் ஆப்பனூர் அருகே ஆண்டியேந்தல் கிராமத்தில் அரியநாச்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஆப்பநாட்டை சேர்ந்த 448 கிராம பொதுமக்கள் இந்த அம்மனை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த கோயிலில் துரட்டி ஆதொண்டை மரம் தலவிருட்சமாக உள்ளது. இந்த கோயிலின் தெற்கே ஒரு தனிக்கல்லில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நடுகல் தமிழி(தமிழ் பிராமி) கல்வெட்டு காணப்படுகிறது. ராமநாதபுரத்தில் கிடைத்த முதல் நடுகல் தமிழிக் கல்வெட்டு இதுவாகும். இக்கல்வெட்டு உறுதியற்ற வெண்பாறைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இது 3 1/2 அடி நீளமும், 1 1/2 அடி அகலமும் கொண்டது.இந்த கல்வெட்டை கமுதி அடுத்துள்ள பேரையூரைச் சேர்ந்த தொல்லியல்ஆர்வலர் முனியசாமி கண்டு பிடித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: ஆப்பனூர் அரியநாச்சியம்மன் கோயில் அருகே கிடைத்த கல்வெட்டு தொடர்பான தகவலை மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய செயலரும், தொல்லியல் அறிஞருமான சாந்தலிங்கம், உதவி ஆய்வாளர் உதயகுமார் ஆகியோரது உதவியுடன் ஆய்வு செய்தோம். அந்த ஆய்வில் ‘ ஆப்பன்னூர் ஏறிய் மாண்டு விழுந்த அத்தியன் கீரன் கல்’ என்ற செய்தி மூன்று வரிகளில் பதிவாகி உள்ளது. அதாவது ஆப்பனூருடன் சண்டையிட்டு இறந்த அத்தியன் கீரன் என்ற வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அத்தியன் என்பது தந்தையாகவும், கீரன் மகனாகவும் இருக்கலாம். எழுத்தமைப்பின் அடிப்படையில் இக்கல்வெட்டின் காலம் கி.பி முதலாம் நூற்றாண்டு ஆகும். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பனூர் என்ற கிராமத்தின் பெயர் கல்வெட்டில் பதிவாகியிருப்பது வியப்பளிக்கிறது.

மேலும் இக்கோவிலிலுள்ள மற்ற சேதுபதி மன்னர்கள் கால கல்வெட்டுகளிலும் இரண்டு இடங்களில் ஆப்பனூர் என்ற பெயர் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரம் மாவட்டங்களில் இதற்கு முன்பு தேரிருவேலி மற்றும் அழகன்குளம் அகழாய்வுகளில் கிடைத்த சங்ககாலப் பானைகளில் பல்வேறு தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. முதன்முறையாக ஒரு கல்லில் தமிழி (தமிழ் பிராமி) எழுத்துகள் பொறிக்கப்பட்டிருப்பது இதுவே முதன் முறை ஆகும்.

மேலும் பிறமொழிக் கலப்பில்லாமல் தூயத் தமிழில் பொறிக்கப்பட்டிருப்பது இந்த கல்வெட்டின் சிறப்பம்சம் இதனை பாதுகாப்பது நமது கடமை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *