15 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சம் கண்ட புதிய டைனோசர் இனம்!
தாய்லாந்தின் கலாசின் மாகாணத்தில் உள்ள பூ நொய் (Phu Noi) பகுதியில் சுமார் 15 கோடி ஆண்டுகள் பழமையான, இதுவரை அறியப்படாத புதிய வகை ‘பாம்பு கழுத்து’ டைனோசர் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது ஜுராசிக் காலத்தின் இறுதிப் பகுதியில், இந்த உயிரினம் வாழ்ந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். தாவரங்களை உணவாகக் கொண்ட இந்த டைனோசருக்கு ‘உராகசாரஸ் கலாசினென்சிஸ்’ (Uragasaurus kalasinensis) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த டைனோசரின் மிக முக்கியமான சிறப்பம்சம் அதன் மிக நீண்ட கழுத்து ஆகும். இதன் உடல் நீளம் சுமார் 20 மீட்டர் வரை இருந்திருக்கலாம். அதாவது, ஒரு கிரிக்கெட் மைதானத்தின் நீளத்துக்கு ஒப்பான அளவிலான பிரமாண்ட உயிரினமாக இது இருந்திருக்கலாம்.
இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரும், தாய்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் அபிரத் நில்பனபன் (Dr. Apirat Nilphanaphan) கூறுகையில், “இந்தப் புதைபடிவம், 2008-ஆம் ஆண்டு முதன்முதலாக அடையாளம் காணப்பட்ட பகுதியில் இருந்து கிடைத்த மிகப்பெரிய புதைபடிவத் தொகுப்பின் ஒரு பகுதியாகும்” என்றார்.
அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் பாம்பின் செதில்களைப் போன்ற தோற்றமுடைய சில கற்களைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, அந்த இடம் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
‘பூ நோய்’ (Phu Noi) எனப்படும் அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில், ஜுராசிக் காலத்தைச் சேர்ந்த ஏராளமான புதைபடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை டைனோசர்களின் எலும்புத் துண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டைனோசர்களின் பற்கள் மற்றும் பல்வேறு எலும்புகளும் ஆராய்ச்சியாளர்களால் மீட்கப்பட்டன.
புதிய டைனோசர் இனத்தை அடையாளம் காண முக்கிய ஆதாரமாக அமைந்தது, அதன் முதுகுப் பகுதியிலுள்ள முதுகெலும்பு (Dorsal Vertebra) புதைபடிவமாகும். அந்த எலும்பில் காணப்பட்ட தனித்துவமான அமைப்புகள், இது புதிய இனத்தைச் சேர்ந்த டைனோசர் என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்ய உதவின.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட சி.டி. (CT) ஸ்கேன் ஆய்வில், இந்த டைனோசர் மமென்சிசாரிடே (Mamenchisauridae) என்ற நீண்ட கழுத்து கொண்ட சௌரோபோட் (Sauropod) குடும்பத்தைச் சேர்ந்தது என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நீண்ட கழுத்து, பல்வேறு உயரங்களில் வளரும் தாவரங்களை எளிதாக உணவாகப் பெறுவதற்கு உதவியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்

