நேபாள வெள்ளத்தில் சிக்கிய 100+ தமிழர்கள்? டெல்லியில் தமிழக அமைச்சர்கள் அவசர ஆலோசனை!
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் பலர் சிக்கியுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அங்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். அவர்களை மீட்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு குழுவினர் யாத்திரை மற்றும் ஆன்மிகப் பயணமாக நேபாளம் சென்றிருந்த நிலையில், சிலருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை குரோம்பேட்டை ராதா நகர் பகுதியைச் சேர்ந்த பயண ஏற்பாட்டு நிறுவனத்தின் மூலம் 49 பேர் கைலாஷ் யாத்திரைக்குச் சென்றதாகவும், அவர்கள் நேபாள வெள்ளத்தில் சிக்கிய நிலையில் தொடர்பு கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல், கோவை ஈஷா யோகா மையத்தைச் சேர்ந்த சுமார் 80 பேரும் நேபாளம் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் தற்போதைய நிலை குறித்து உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதனிடையே, ஆன்மிகப் பேச்சாளர் தேச. மங்கையர்க்கரசி தலைமையில் கைலாஷ் யாத்திரைக்குச் சென்ற 150 பேர் பாதுகாப்பாக திபெத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தேச. மங்கையர்க்கரசி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத் மற்றும் தென்னரசு ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.
தமிழ்நாடு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையக் கட்டுப்பாட்டு அறையை அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து வரும் அழைப்புகள், அவர்களின் இருப்பிடத்தைக் கண்டறியும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
மேலும், தூதரக அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி, நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.
இதுகுறித்து அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், முதலில் 50-க்கும் மேற்பட்டோர் மட்டுமே நேபாளம் சென்றிருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அங்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.
அவர்களில் 26 பேர் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்துள்ளதாகவும், சிலரை இதுவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறினார். மத்திய அரசு மற்றும் நேபாள அரசுடன் தொடர்ந்து பேசி, தமிழர்களை பாதுகாப்பாக மீட்டு அழைத்து வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நேபாள வெள்ளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் நீடிக்கும் நிலையில், அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் வழங்கவும், மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கவும் தமிழக அரசின் உதவி மையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

