நிலவுல tent அடிப்போம் are you readyயா? வருங்கால மனைவிக்கு இளைஞர் கொடுத்த வித்தியாசமான பரிசு

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த அசோக் சரவணன் (32), தனது வருங்கால மனைவிக்கு வித்தியாசமான பரிசு வழங்குவதற்காக நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

பொறியியல் பட்டதாரியான அசோக் சரவணனுக்கும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா என்கிற வர்ஷினிக்கும் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி சேலத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், தனது வருங்கால மனைவிக்கு யாரும் வழங்காத வகையில் வித்தியாசமான பரிசு வழங்க வேண்டும் என அசோக் சரவணன் கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, லண்டனில் வசிக்கும் தனது சகோதரியின் உதவியுடன் சுவிட்சர்லாந்தில் செயல்படும் தனியார் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, நிலவில் நிலம் வாங்குவதற்காக விண்ணப்பித்துள்ளார்.

இதற்காக இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.23,000 செலுத்தியதாகவும், அதற்கான 10 பக்க ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“உலகில் யாரும் தனது வருங்கால மனைவிக்கு வழங்காத வித்தியாசமான பரிசை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிலவில் நிலம் வாங்கினேன்” என அசோக் சரவணன் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் ராசிபுரம் சுற்றுவட்டாரத்தில் பரவியதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *