பிக்பாஸ் வீடாக மாறும் சட்டமன்றம் ? | “சட்டமன்றம் ரியல் பிக்பாஸ் போல இருக்கு” – சீமான் கடும் விமர்சனம்!

பிக்பாஸ் வீடாக மாறும் சட்டமன்றம் ?

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இதனிடையே, விஜயின் அரசியல் வருகைக்குப் பிறகு இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே அரசியல் நிகழ்வுகளை கவனிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகளின் நேரலை காட்சிகளையும் பலரும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், சட்டப்பேரவை நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “சட்டமன்றம் ரியல் பிக்பாஸ் போல இருக்கிறது; அருமையான என்டர்டெயின்மென்ட்டாக உள்ளது” என விமர்சித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற பூலித்தேவன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சீமான், தமிழ்நாட்டை தமிழர் மட்டுமே ஆள வேண்டும் என்று தான் கூறவில்லை என்றும், புரட்சிகர சிந்தனையுடன் கூடிய தமிழ் மகன் தமிழகத்தை ஆள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், சட்டப்பேரவையில் அமைச்சர்கள் தமிழை பார்த்துப் படிக்கும்போதே பல தவறுகள் ஏற்படுவதாகவும் அவர் விமர்சித்தார். தமிழக மக்களின் முக்கிய பிரச்னைகள் குறித்து சட்டப்பேரவையில் தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டிய நிலையில், திரைப்பட பேனர் கிழிக்கப்பட்ட விவகாரம் சர்வதேச பிரச்னை போல் பேசப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு, காவிரி நீர் பிரச்னை, கச்சத்தீவு விவகாரம், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்றும் சீமான் கூறினார்.

தொடர்ந்து, “சட்டமன்றம் தியேட்டர் போல இருக்கிறது. திரையரங்கில் உட்கார்ந்து பார்ப்பது மாதிரியே உள்ளது. ‘ஆல் இஸ் வெல்’ என்கிறார்கள். முதலமைச்சரை பார்க்க LED வேண்டும் என்கிறார்கள்; அதையும் ரசிக்கிறார்கள். சட்டமன்றம் ரியல் பிக்பாஸ் போலவே உள்ளது” என சீமான் கடுமையாக விமர்சித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *