பிரபல நடிகைக்கு இப்படியொரு நிலைமையா? விமான நிலையத்தில் நடந்த மோசமான சம்பவம்

தில்லாலங்கடி, தர்மபிரபு, நிமிர்ந்து நில் உள்ளிட்ட திரைப்படங்களிலும், சூழல் வெப் சீரிஸிலும் நடித்தவர் நடிகை லதா ராவ். சின்னத்திரையிலும் பிரபலமான இவர், சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து லதா ராவ் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்வதற்காக விமான நிலையம் சென்றிருந்தபோது, அவருக்கு திடீரென மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. ஆனால், தன்னிடம் சானிட்டரி நாப்கின் இல்லாததால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

விமான நிலையத்தில் பணம் செலுத்தி நாப்கின் வாங்கிக் கொள்ளலாம் என நினைத்து, அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். ஆனால், அங்கு அதற்கான வசதி இல்லை என தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அவர் பரிதவித்த நிலையில், கேட் எண் 7 அருகே உள்ள மருந்தகத்தில் சானிட்டரி நாப்கின் கிடைக்கும் என ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, விமானப் பயணத்திற்கான அறிவிப்பும் தொடங்கியதால், கேட் ஒன்றில் இருந்து கேட் 7-க்கு அவசரமாகச் சென்று நாப்கினை வாங்கிக்கொண்டு மீண்டும் திரும்பியுள்ளார் லதா ராவ்.

தனது அனுபவத்தை பகிர்ந்த அவர், மாதவிடாய் குறித்து சமூக வலைதளங்களில் பேசுவது கேவலமானதோ, சங்கடமானதோ அல்ல என தெரிவித்துள்ளார்.

மேலும், பயணம் மேற்கொள்ளும்போது கேஸ் ஸ்டவ் அணைத்தோமா, வீட்டின் சாவியை எடுத்துக்கொண்டோமா என நினைவில் வைத்துக்கொள்வதைப் போல, பெண்கள் தங்களது பையில் ஒரு சானிட்டரி நாப்கினை எடுத்துள்ளோமா என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

அது நமக்குப் பயன்படாமல் போனாலும், மற்றொரு பெண்ணுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும் எனக் கூறி விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளார்.

லதா ராவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ள நிலையில், பலரும் அவரது விழிப்புணர்வு பதிவை பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *