டாலருக்கு செக் வைக்குமா BRICS? இந்தியாவின் புதிய திட்டத்தால் மாறப்போகும் உலக பொருளாதாரம்!
உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலரின் ஆதிக்கம் மற்றும் மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் ஆகியவை பொருளாதார சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், BRICS நாடுகளின் மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
டெல்லியில் நடைபெறும் இந்த மாநாட்டில், எரிசக்தி வர்த்தகம் முதல் சர்வதேச நாணயப் பயன்பாடு வரை பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, BRICS நாடுகளுக்குள் புதிய எரிசக்தி வர்த்தக கட்டமைப்பு உருவாகுமா என்ற கேள்வி சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை அடிப்படையாகக் கொண்டு உருவான BRICS கூட்டமைப்பு தற்போது விரிவடைந்துள்ளது.
எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளும் தற்போது BRICS அமைப்பில் இடம்பெற்றுள்ளன.
இந்த கூட்டமைப்பின் முக்கியத்துவம், உலகின் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோர் நாடுகள் ஒரே அமைப்பில் இருப்பதில்தான் உள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் நீரிணை தொடர்பான சிக்கல்கள் காரணமாக கச்சா எண்ணெய் சந்தையில் தொடர்ந்து அழுத்தம் காணப்படுகிறது.
இந்த சூழலில் BRICS நாடுகள் தங்களுக்குள் புதிய எரிசக்தி வர்த்தக முறையை உருவாக்கினால், சர்வதேச எண்ணெய் சந்தையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
குறிப்பாக, எண்ணெய் வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு மாற்றாக இந்திய ரூபாய், சீன யுவான் அல்லது ஐக்கிய அரபு அமீரக திர்ஹாம் போன்ற உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்துவது குறித்து எதிர்காலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
BRICS நாடுகளுக்குள் நீண்டகால எண்ணெய் விநியோக ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டு, நிலையான விலையில் எரிபொருள் கிடைக்கும் சூழல் ஏற்பட்டால் இந்தியா மற்றும் சீனா போன்ற மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோர் நாடுகளுக்கு அது சாதகமாக அமையலாம்.இதன் மூலம் எரிபொருள் விலை மற்றும் பணவீக்க அழுத்தத்தை ஓரளவு கட்டுப்படுத்தும் வாய்ப்பும் உருவாகலாம்.
BRICS நாடுகளுக்குள் உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் அதிகரித்தால், சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் பயன்பாடு படிப்படியாக குறைய வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வட்டாரங்களில் விவாதம் எழுந்துள்ளது.
அதேநேரத்தில், இது உடனடியாக டாலரின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் என்று கூற முடியாது. உலகளாவிய நிதி அமைப்பில் டாலருக்கு இருக்கும் முக்கியத்துவம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
BRICS நாடுகள் இணைந்து எரிசக்தி மற்றும் வர்த்தக கட்டமைப்பை வலுப்படுத்தினால், உலக பொருளாதாரத்தில் புதிய வர்த்தக பாதைகள் உருவாகலாம்.
ஆனால், மேற்கத்திய நாடுகளுக்கான எண்ணெய் விநியோகம் குறைந்தால் அங்கு எரிபொருள் விலை அதிகரிக்கும் சூழலும் ஏற்படலாம். இதன் தாக்கம் உலகளாவிய பொருளாதாரத்திலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.
எனவே, டெல்லியில் நடைபெறும் BRICS மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள், எதிர்கால எரிசக்தி வர்த்தகம் மற்றும் உலக பொருளாதாரத்தின் போக்கில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

