மாணவர் பாரதிதாசன் விவகாரம் வெடித்த சர்ச்சை…நடந்து என்ன?
மலேசியாவில் படித்து வரும் தமிழக ஆராய்ச்சி மாணவர் பாரதிதாசன் கல்வி உதவித்தொகை விவகாரம், தற்போது அரசியல் களத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டம், தமிழ்நாடு அரசால் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் சமூகங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் QS தரவரிசையில் முதல் 1000 இடங்களுக்குள் உள்ள தலைசிறந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் முதுகலை மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சிகளைத் தடையின்றித் தொடர இது வழிவகுக்கிறது.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்குள் உள்ள மாணவர்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.36 லட்சமும், ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சத்திற்குள் உள்ளவர்களுக்கு ரூ.24 லட்சமும் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. பல்கலைக்கழக கல்விக் கட்டணம், விமான மற்றும் விசா கட்டணம், மருத்துவக் காப்பீடு மற்றும் மாதாந்திர வாழ்க்கைச் செலவுத் தொகை ஆகிய அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கி, எளிய குடும்பப் பின்னணியைச் சேர்ந்த மாணவர்களின் வெளிநாட்டு உயர்கல்விக் கனவை இத்திட்டம் நனவாக்குகிறது.
இத்திட்டத்தின் கீழ் மலேசியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பிரிவில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார் தமிழக மாணவர் பாரதிதாசன்…
இவர் கடந்த மாதம் வெளியிட்ட வீடியோ ஒன்று பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அதில், தனது 2-ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை விடுவிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து, சட்டப்பேரவையில் அமைச்சர் வன்னி அரசு இதுதொடர்பாக விளக்கம் அளித்தார்.
அதில், “முதலாமாண்டுக்கான ரூ.36 லட்சம் மாணவருக்கு முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. 2-ஆம் ஆண்டுக்கான முறையான கணக்குகளை மாணவர் சமர்ப்பிக்கத் தவறிய போதிலும், படிப்பு தடைபடக்கூடாது என்பதற்காகக் கல்விக் கட்டணம் ரூ.5.57 லட்சம் மற்றும் வாழ்க்கைச் செலவு ரூ.6.65 லட்சம் என ஏற்கனவே மொத்தம் ரூ.12 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார்.
மேலும், மாணவர் பாரதிதாசன் இரண்டாம் ஆண்டு ஆய்வுச் செலவுகளுக்காக ரூ.19.50 லட்சம் கோரிய நிலையில், அவர் சமர்ப்பித்த செலவினப் பட்டியலுக்குப் பல்கலைக்கழகப் பதிவாளர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று சமூக நீதித்துறை தெரிவித்தது. அதோடு, முதலாமாண்டில் ஆய்வுப் பொருட்கள் வாங்கியதற்கான ரூ.8.18 லட்சம் செலவு ரசீதுகள் மற்றும் கட்டணச் சான்றுகள் (Proof of Payment) திருப்திகரமாக இல்லை எனத் தணிக்கைத்துறை விளக்கம் கேட்டுள்ளதாகவும், இதுதொடர்பாகப் பல்கலைக்கழகப் பதிவாளரிடமிருந்து உறுதிப்படுத்தல் பதில் கிடைத்தவுடன் மீதித் தொகையும் முறைப்படி வழங்கப்படும் எனவும் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்துப் பேசிய மாணவர் பாரதிதாசன், “ஏற்கனவே தேவையான விவரங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பிவிட்டேன். இருப்பினும், அரசுத் தரப்பிலிருந்து இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை. இதுகுறித்து அமைச்சர் வன்னி அரசு அவர்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப் பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்தவுடன் நான் பில்களைச் சமர்ப்பிக்கவில்லை என்று தவறான தகவலைப் பரப்பி வருகிறார்கள்; வரலாறு உங்களை மன்னிக்காது. பாதிக்கப்பட்ட மாணவர் மீதே தவறான பிம்பத்தைக் கட்டமைக்க முயல்வது மிகவும் வருத்தத்திற்குரியது. தற்போது மீண்டும் தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்பியிருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து இந்த விவகாரம் சற்று அமைதியாக இருந்த சூழலில், மாணவர் பாரதிதாசன் தற்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அதில், “அனைத்து ஆவணங்களையும் அனுப்பிய பிறகும் இன்றுவரை எனக்கான நிதி வரவில்லை. மேலும், கல்லூரியில் இருந்து ஆய்வுப் பொருட்கள் வாங்கியது குறித்துக் கேள்வி எழுப்பி, எனது நம்பகத்தன்மையை சந்தேகத்திற்கு உள்ளாக்குவது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்துகிறது” என்று வேதனையுடன் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவிய நிலையில், எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தன. இதற்கு மீண்டும் விளக்க அறிக்கை வெளியிட்ட சமூக நலத்துறை, “மாணவர் பாரதிதாசன் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிடுகிறார்” என்று குறிப்பிட்டது.
அரசின் இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்து உடனடியாக மற்றொரு வீடியோவை வெளியிட்ட பாரதிதாசன், “நீங்கள் கேட்ட அனைத்து கட்டணச் சீட்டுகளையும் அனுப்பிவிட்டேன்” என்று கூறி, அதற்கான ஆதாரமாக தனது மின்னஞ்சல் பக்கத்தை திரையில் காட்டினார். மேலும் தன் மீது தனிநபர் தாக்குதல் நடத்துவது மிகுந்த வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் விவாதப் புயலைக் கிளப்பிய நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். “மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்க முடியாது என்றால், அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடுங்கள். திமுகவும், தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, கடந்த திமுக ஆட்சியிலும் பாரதிதாசனுக்குத் தாமதமாகவே உதவித்தொகை சென்றதாகக் கூறி, பழைய நாளிதழ் செய்தி ஒன்றைக் குறிப்பிட்டு தவெகவினர் திமுகவை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது செய்தியாளர்களைச் சந்தித்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, “மாணவர் பாரதிதாசனின் முழுமையான படிப்புக்கு அரசு துணை நிற்கும். ஒரு மாணவனாக அவரின் வலி எனக்குப் புரிகிறது. அவருக்கான எஞ்சிய உதவித்தொகை இன்னும் 2 நாட்களில் வழங்கப்படும்” என்று உறுதியளித்துள்ளார்.

