‘பாகுபலி’ LVM3 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது அமெரிக்காவின் ப்ளூபேர்ட்-6 செயற்கைக்கோள்
இந்தியாவின் ‘பாகுபலி ராக்கெட்’ என அழைக்கப்படும் இஸ்ரோவின் கனரக ஏவுகணையான LVM3 ராக்கெட் மூலம், அமெரிக்காவைச் சேர்ந்த ‘ப்ளூபேர்ட்–6’ (BlueBird-6) செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2-ஆவது ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. திட்டமிட்டபடி, செயற்கைக்கோள் அதன் குறிப்பிட்ட கக்ஷியில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
இந்த செயற்கைக்கோள் மூலம், தொலைதூர மற்றும் சேவை வசதி குறைந்த பகுதிகளுக்கு கைப்பேசி இணைப்பு, அதிவேக 4ஜி மற்றும் 5ஜி இணைய சேவைகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நேரடியாக செயற்கைக்கோள் வழியாக மொபைல் போன்களுக்கு இணைய சேவை வழங்கும் தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ இதுவரை விண்ணில் செலுத்திய செயற்கைக்கோள்களில், அதிக எடை கொண்ட செயற்கைக்கோளாக ‘ப்ளூபேர்ட்–6’ கருதப்படுகிறது. இந்த செயற்கைக்கோளின் எடை சுமார் 6,100 கிலோ ஆகும். இந்திய மதிப்பில் இதன் மதிப்பு சுமார் 560 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட AST SpaceMobile நிறுவனம், செயற்கைக்கோள் மூலம் உலகளாவிய அளவில் 4ஜி, 5ஜி இணைய சேவைகளை வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது.
இந்த வெற்றிகரமான ஏவுதல், இந்தியாவின் கனரக செயற்கைக்கோள் ஏவுதல் திறனை மீண்டும் உலக அரங்கில் உறுதிப்படுத்தியுள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன

