“‘ஜனநாயகன்’ அரசியல் பிரசாரம் அல்ல… சிந்திக்க வைக்கும் படம்!” – ஹெச். வினோத்

தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், இயக்குநர் ஹெச். விbனோத் இயக்கத்தில் உருவாகியுள்ளது. விஜய்யின் கடைசி திரைப்படமாகக் கருதப்படும் இப்படம் ஜூலை 23 அன்று வெளியாக உள்ள நிலையில், படம் குறித்து இயக்குநர் ஹெச். வினோத் அளித்துள்ள பேட்டி பல புதிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

அவர் கூறியதாவது:

“விஜய் சார் முதலில் ‘GOAT’ படம்தான் தனது கடைசி படம் என்று முடிவு செய்திருந்தார். பின்னர் இன்னொரு படம் நடிக்க உள்ளார் என்று தெரிந்ததும், நான் அவரிடம் ஒரு கதையை கூறினேன். இரண்டு மாஸ்டர்மைண்ட்கள் மோதும் கதையாக அது இருந்தது. ஆனால், முதல் பாதியை கேட்ட பிறகு இது மிகவும் ஹெவியான சப்ஜெக்ட், மேலும் தனக்கு முழுமையாக புரியவில்லை என்று கூறினார். அதன் பிறகுதான் ‘பகவந்த் கேசரி’ ரீமேக் செய்யலாம் என்ற யோசனையை அவரே தெரிவித்தார். விஜய்யின் கடைசி படம் என்பதால் நானும் அதற்கு சம்மதித்தேன்.”

வினோத் மேலும் கூறுகையில்,”ஸ்கிரிப்ட் எழுதித் முடித்தவுடனேயே ‘ஜனநாயகன்’ என்ற தலைப்பை முடிவு செய்தோம். ஜனநாயகத்தை காப்பாற்றும் நாயகன், மக்களின் நாயகன் என்ற இரு அர்த்தங்களும் கதைக்கு பொருத்தமாக இருந்தது. ‘நாளைய தீர்ப்பு’ என்ற தலைப்பும் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் ‘ஜனநாயகன்’ விஜய்க்கு ஒரு பிராண்டாக மாறும் என்பதால் அதையே தேர்வு செய்தோம். கதாநாயகனின் பெயராக ‘தளபதி வெற்றி கொண்டான்’ என்பதையும் முன்கூட்டியே முடிவு செய்திருந்தோம்.”

விஜய்யின் சமூக அக்கறை குறித்தும் அவர் பேசியுள்ளார்.”விஜய் சாருக்கு பெண்களின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு குறித்து எப்போதும் அதிக அக்கறை உண்டு. அவரது தங்கை மறைந்த பிறகு அந்த அக்கறை இன்னும் அதிகரித்தது. ‘பிகில்’ படத்திலும் அதைப் பார்த்தோம். ‘ஜனநாயகன்’ படத்திலும் ஒரு பெண்ணின் பயத்தையும், நாட்டின் பயத்தையும் இணைத்து பேசும் கதை அமைந்துள்ளது.”

அரசியல் குறித்தும் முக்கிய விளக்கம் அளித்த வினோத், “படத்தில் அரசியல் குறியீடுகள் வருவதை விஜய் சார் விரும்பவில்லை. நான் வைத்த சில விஷயங்களையும் ஏன் சேர்க்கிறீர்கள் என்று கேட்டார். அதே நேரத்தில், இது ரசிகர்களுக்கான படமாக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.” என்றார்.

மேலும், “‘ஜனநாயகன்’ TVK-வை மட்டும் புகழ்ந்து பேசும் படம் அல்ல. அதேபோல் இது வழக்கமான கமர்ஷியல் என்டர்டெய்னரும் இல்லை. சமூகப் பொறுப்புள்ள, சிந்திக்க வைக்கும் அரசியல் கருத்துகளை இந்தப் படம் முன்வைக்கிறது. அது ஆரோக்கியமான விவாதங்களை உருவாக்கும் என்று நம்புகிறேன்.” எனத் தெரிவித்தார்.

படத்தின் க்ளைமாக்ஸ் குறித்து அவர் கூறியதாவது:”‘ஜனநாயகன்’ சயின்ஸ் ஃபிக்ஷன் படம் அல்ல. இது நவீன போர் (Modern Warfare) பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. ட்ரோன்கள், ஹியூமனாய்ட் ரோபோக்கள் போன்ற தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட கதை இது.”

படம் வெளியாவதற்கு முன் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்தும் உருக்கமாக பேசிய அவர், “படம் லீக் ஆனதாக தெரிந்தபோது இரண்டு முறை அழுதேன். ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது விஜய் சார் கொடுத்த உறுதுணை எனக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது.” என்றார்.

இறுதியாக அவர்,”‘ஜனநாயகன்’ ஒற்றுமையின் அரசியலை பேசும் படம்; வெறுப்பை பேசாது. அதனால் இந்தப் படத்தின் மீது வெறுப்பை கொட்டாதீர்கள். அது எனக்கும் நல்லதல்ல, உங்களுக்கும் நல்லதல்ல, நாட்டிற்கும் நல்லதல்ல. குறிப்பாக படத்தின் கடைசி 30 நிமிடங்கள் மிகவும் சென்சிட்டிவாக இருக்கும்.” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *