“தண்ணீர் பாட்டில்கள் கொண்டு அழுகாமல் பாதுகாக்கப்படும் மாலுமியின் சடலம்”
தூத்துக்குடியைச் சேர்ந்த கப்பல் மாலுமி நிஷாந்த், ஓமன் நாட்டுக்கு சொந்தமான எண்ணெய் கப்பலில் பணியாற்றி வந்துள்ளார். இவர், ஜூன் 12-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, கப்பல் ஓமன் நாட்டு துறைமுகத்தில் நின்று கொண்டிருந்தபோது உடல்நல பாதிப்பு காரணமாக நிஷாந்த் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. முறையான குளிரூட்டும் வசதி ஏதுமின்றி, அவரது உடல் இரண்டு நாட்களுக்கும் மேலாக கப்பலிலேயே உள்ளதாகவும், உடல் வேகமாக அழுகுவதைத் தடுக்க கப்பல் குழுவினர் குளிர்ச்சியான தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்தும் சூழலும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சக ஊழியர்கள் வீடியோ வெளியிட்டு அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இதனை எதிர்த்து கப்பலில் வேலை செய்யும் பலரும் தங்களது எதிர்ப்புக் குரல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். “எங்களிடம் ஆயுதம் ஏந்திய இராணுவப் படைகள் இல்லை. குறிவைத்து இந்திய கப்பல்கள் தாக்கப்படுகின்றன. எங்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை” என்று கப்பல்களில் வேலை செய்யும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்த நிஷாந்தின் மனைவி சராபின், அவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும், அவரது உடலை உடனடியாக மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மரணத்திற்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தனது கணவரின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவர் எப்படி உயிரிழந்தார் என்பது தொடர்பான உண்மையைக் கண்டுபிடித்து தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அதேபோல், கப்பல் நிறுவனத்திடமிருந்து உரிய இழப்பீடு பெற்றுத் தர மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

