பட்டிமன்றம் முதல் இலக்கியம் வரை… சாலமன் பாப்பையாவின் சாதனை பயணம்

பட்டிமன்றம் முதல் இலக்கியம் வரை... சாலமன் பாப்பையாவின் சாதனை பயணம்

பிரபல பட்டிமன்றப் பேச்சாளரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா தனது 90-வது வயதில் காலமானார். மதுரை திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் 1936-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி பிறந்த இவர், தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றியதுடன், எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர், நடுவர், பதிப்பாசிரியர் எனப் பல்வேறு துறைகளில் தனது பங்களிப்பைச் செய்துள்ளார்.

தமிழ் மக்களிடையே பட்டிமன்றங்களைப் பிரபலப்படுத்தியவர்களில் முக்கியமானவர் சாலமன் பாப்பையா. குடும்பம், உறவுகள், சமூக வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பட்டிமன்றங்களை நடத்தி, தனது நகைச்சுவை கலந்த பேச்சால் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார்.

இலக்கியத் துறையிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. திருக்குறளுக்கு உரை விளக்கம் எழுதியதுடன், புறநானூறு பாடல்களை புதிய வரிசையில் உரையெழுதி வெளியிட்டுள்ளார். மேலும், அகநானூற்றுக்கு மூன்று தொகுதிகளாக உரை எழுதியுள்ளார்.

தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கான இவரது பணிகளைப் பாராட்டி பத்மஸ்ரீ, கலைமாமணி, திருக்குறள் செம்மல் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

பட்டிமன்ற மேடைகளைத் தாண்டி சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களிலும் சாலமன் பாப்பையா நடித்துள்ளார். தனது தனித்துவமான பேச்சாற்றல் மற்றும் தமிழ் இலக்கியப் பணிகள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த அவரது மறைவு, தமிழ் உலகிற்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *