இடைத்தேர்தலில் தனித்துக் களமிறங்கும் இடதுசாரிகள்.. தவெக, திமுகவுக்கு ஆதரவு இல்லை!

இடைத்தேர்தலில் தனித்துக் களமிறங்கும் இடதுசாரிகள்.. தவெக, திமுகவுக்கு ஆதரவு இல்லை!

தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அக்டோபர் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று, விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்தது. அதேவேளை, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்த அதிமுக 47 இடங்களில் வென்று 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

இதனிடையே, அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததால், 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அங்கு இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தவெக தலைமையிலான கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என பெயரிடப்பட்டு, இரு தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களை களமிறக்க முடிவு செய்யப்பட்டது. இதனால், தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடைத்தேர்தலில் யாரை ஆதரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளன. தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வேட்பாளர்களை நிறுத்துகின்றன.

சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர், இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு இல்லை என்றும், அதே நேரத்தில் திமுகவுக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மக்கள் இடதுசாரிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அதேசமயம், தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து அளித்து வரும் ஆதரவு தொடரும் என்றும் இடதுசாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதனால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் போட்டி மேலும் விறுவிறுப்படைந்துள்ளது. தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் களமிறங்குவதால், இரு தொகுதிகளிலும் ஐந்துமுனைப் போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *