சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை | உதவி எண் அறிவிப்பு!
ஜூன் 9ஆம் தேதி தமிழக முதல்வரால் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கி வைக்கப்பட்டது. சிங்கப்பெண் அதிரடிப்படைக்கான இலச்சினையை முதல்வர் விஜய் வெளியிட, அதனை ஐஜி பவானிஸ்வரி பெற்றுக்கொண்டார். இதையடுத்து, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடர்பான ஏஐ காணொளி ஒளிபரப்பப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய முதல்வர், “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்காக ₹354 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட உள்ளது. திட்டத்தின் அடுத்த கட்டமாக புதிதாக 2,500 பணியிடங்கள் உருவாக்கப்படும். இதற்காக அதிநவீன வாகனங்களும், உபகரணங்களும் வழங்கப்படும்.
பெண்களும் குழந்தைகளும் மரியாதையுடன் வாழ்வதுதான் ஓர் அரசின் முழுமையான வெற்றி. இந்தியாவிலேயே முதல்முறையாக ட்ரோன்கள் மூலம் பெண்களின் பாதுகாப்பு கண்காணிக்கப்படும்” என்றார்.
மேலும், மாநிலம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்கள் 270 களப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, மொத்தம் 2,538 பிரத்யேக பெண் காவலர்கள் இந்த அதிரடிப்படையின் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், பெண்களின் அவசரகால உதவிக்காக உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை எந்நேரமும் தொடர்புகொள்வதற்காக, பிரத்யேக கட்டணமில்லா உதவி எண் 1091 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
1091 என்ற எண்ணை அழைத்த சில நிமிடங்களிலேயே, பாதிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள சிங்கப்பெண் அதிரடிப்படையின் ரோந்து வாகனங்கள் மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாகச் செல்லும் வகையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

