25 ஆண்டுகால திரைப்பயணம்.. ‘என்ன விலை’ கருணாஸுக்கு சிறப்பான மைல்கல்லாக அமையும்?!
தமிழ் திரையுலகில் நடிகர் கருணாஸ் தனது 25 ஆண்டுகால திரைப்பயணத்தை நிறைவு செய்யும் நிலையில், அவர் நடித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
நகைச்சுவை நடிகராக திரையுலகில் அறிமுகமாகி, பின்னர் குணச்சித்திரம் மற்றும் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் என பல்வேறு பரிமாணங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய கருணாஸுக்கு, ‘என்ன விலை’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்துள்ளது.
இப்படம் குறித்து பேசிய கருணாஸ், கடந்த 25 ஆண்டுகளாக இப்படியொரு திரைப்படத்திற்காகவும், சிறப்பான படக்குழுவிற்காகவும் தான் காத்திருந்ததாக தெரிவித்துள்ளார். இயக்குநர் சஜீவ் பழூர் கதையை கூறிய உடனேயே படத்தில் நடிக்க சம்மதித்ததாகவும், அழகான மற்றும் உணர்வுப்பூர்வமான கதையாக இப்படம் உருவாகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், விருதுகள் மற்றும் திரைப்பட விழாக்களில் கிடைக்கும் அங்கீகாரங்கள் ஊக்கமளித்தாலும், திரைப்படம் இறுதியில் மக்களுக்கானது என்றும், சாதாரண மனிதர்களின் வாழ்க்கை, போராட்டங்கள், சுயமரியாதை மற்றும் நம்பிக்கையை பேசும் ‘என்ன விலை’ திரைப்படம் பார்வையாளர்களின் மனதை நிச்சயம் தொடும் என்றும் கருணாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோர் கலாமயா சினிவெர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர்.
‘என்ன விலை’ திரைப்படத்தில் நிமிஷா சஜயன், கருணாஸ், விஜயலட்சுமி, பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சித்தா தர்ஷன், மோகன் ராம், சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ், கோலி சோடா பாண்டி, ஜே.எஸ். கவி, சுவாமிநாதன், தீபா சங்கர், கவி நக்கலைட்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்திற்கு அல்பி ஆண்டனி ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பையும், தபஸ் நாயக் ஒலி வடிவமைப்பையும் கவனித்துள்ளனர்.
ஏற்கனவே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றுள்ள ‘என்ன விலை’, வரும் செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கருணாஸின் 25 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக இப்படத்தின் வெளியீடு அமைந்துள்ளது.

