“விஜய் பொதுக்கூட்டம்” துப்பாக்கியுடன் வந்த நபர்
புதுவை : இன்று புதுவையில் நடைபெற உள்ள தவெக மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தை முன்னிட்டு அங்கு பரபரப்பும், பின்னர் தளர்வும் உருவானது. உப்பளம் துறைமுகம் அருகே பெரிய திரளாக மக்கள் திரண்ட நிலையில் கூட்டத்தினுள் நுழைவதற்கான அனுமதி பற்றிய விவகாரம் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.
முதலில் கூட்டத்திற்கான நுழைவு பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வாயில் முன்பு பல தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதை தொடர்ந்து கட்சியின் பொது செயலாளர் ஆனந்த் பேச்சுவார்த்தை நடத்தி, பாஸ் இல்லாதவர்களுக்கும் அனுமதி வழங்க போலீசாருடன் ஒருமித்த முடிவு எட்டினார். இதனால் வாயில் முன்பு காத்திருந்த மக்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். பாஸ் இல்லாத ஆதரவாளர்கள் அனைவரும் பொதுக்கூட்டத்திற்குள் நுழைந்ததால் அங்கு உற்சாகம் அதிகரித்தது.
இதற்கு முன் அக்கட்சியின் நிர்வாகி பிரபுவின் பாதுகாவலர் டேவிட் என்பவர், அனுமதியின்றி கைத் துப்பாக்கியுடன் கூட்டத்திற்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் உடனடியாக அவரை தடுத்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். ஆயுதத்தை ஏன் எடுத்துச் சென்றார், அனுமதி இருந்ததா போன்ற கேள்விகளில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவங்களால் ஒருபுறம் பதற்றம் ஏற்பட்டபோதிலும், பின்னர் ஏற்பட்ட தளர்வு மற்றும் அனுமதி காரணமாக கூட்டம் மேலும் சூடுபிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

