மீண்டும் காயம் – ரிஷப் பண்ட் ஆட்டத்தை பாதியில் விட்டு வெளியேறினார்!

பெங்களூருவில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான இரண்டாவது நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மீண்டும் காயமடைந்து ஆட்டத்தை பாதியில் விட்டு வெளியேறியுள்ளார்.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா ‘ஏ’ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ‘ஏ’ அணி, துருவ் ஜூரல் விளாசிய 132 ரன்களின் ஆட்டத்தின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 255 ரன்கள் எடுத்தது. இதற்கு பதிலாக தென்னாப்பிரிக்கா ‘ஏ’ அணி கேப்டன் மார்கஸ் அக்கர்மேன் 134 ரன்கள் எடுத்தும், 221 ரன்களில் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் இந்தியா ‘ஏ’ அணி 34 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஆனால் தொடக்கத்தில் அபிமன்யு ஈஸ்வரன் டக் அவுட், சாய் சுதர்சன் 23 ரன்கள், தேவுதட் படிக்கல் 24 ரன்கள் என தொடக்கமே தடுமாறியது.

78 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் இழந்த நிலையில், கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்கினார். வழக்கம்போல தாக்குதல்மிகு ஆட்டத்தை வெளிப்படுத்திய பண்ட், இரண்டு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடித்தார். ஆனால், தென்னாப்பிரிக்க வீரர்கள் அவரை சமாளிக்க ‘ஷார்ட் பால்’ யுக்தியைப் பயன்படுத்தினர். இதில் பண்ட் தலை மற்றும் வயிற்றுப் பகுதியில் பந்தால் அடிபட்டதால், கடும் வலியால் துடித்த அவர் ஆட்டத்தை பாதியிலேயே விட்டு வெளியேறினார்.

ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் காயமடைந்த பண்ட், மூன்று மாத ஓய்வுக்குப் பிறகு தான் மீண்டும் இந்த தொடரில் களமிறங்கியிருந்தார். தற்போது மீண்டும் ஏற்பட்ட காயம் காரணமாக வரும் நவம்பர் 14ம் தேதி தொடங்கும் தென்னாப்பிரிக்கா தொடரில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், மூன்றாவது நாள் முடிவில் இந்தியா ‘ஏ’ அணி இரண்டாவது இன்னிங்ஸில் 40 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழந்து 117 ரன்கள் எடுத்துள்ளது — இதன் மூலம் தென்னாப்பிரிக்காவை விட 151 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *