பிரேசிலின் கோல் மன்னன் நெய்மர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு!
பிரேசில் கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், அந்த அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். FIFA உலகக்கோப்பை ப்ரீ-குவார்ட்டர் ஃபைனல் (Round of 16) போட்டியில் நார்வே அணியிடம் பிரேசில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார். பிரேசில் ஆண்கள் கால்பந்து அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையுடன் தனது சர்வதேச பயணத்தை நெய்மர் நிறைவு செய்துள்ளார்.
இதுகுறித்து கண்ணீருடன் பேசிய நெய்மர், “நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். 2010-ஆம் ஆண்டு அமெரிக்காவின் மெட்லைஃப் மைதானத்தில்தான் பிரேசில் அணிக்காக எனது சர்வதேச பயணம் தொடங்கியது. இப்போது அதே மைதானத்திலேயே எனது சர்வதேச பயணம் முடிவுக்கு வந்துள்ளது. எல்லாம் முடிந்துவிட்டது,” என்று தெரிவித்துள்ளார்.
பிரேசில் கால்பந்து வரலாற்றின் ஜாம்பவானான பீலே (Pele)-யின் சாதனையை முறியடித்து, பிரேசில் தேசிய அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை நெய்மர் ஜூனியர் பெற்றுள்ளார். பிரேசில் தேசிய அணிக்காக சுமார் 130 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அவர், 80 கோல்கள் அடித்ததுடன், 59 கோல்களுக்கு உதவியும் (Assists) செய்துள்ளார்.
மேலும், 2013-ஆம் ஆண்டு ஃபிஃபா கான்ஃபெடரேஷன்ஸ் கோப்பையையும், 2016 ரியோ ஒலிம்பிக்கில் பிரேசிலுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தையும் வென்று கொடுத்துள்ளார்.
பிரேசில் தேசிய அணிக்கான சர்வதேச போட்டிகளில் இருந்து மட்டுமே நெய்மர் ஓய்வு பெற்றுள்ள நிலையில், கிளப் கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளார்.
சர்வதேச அரங்கில் நெய்மர் இனி விளையாடமாட்டார் என்பது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், கிளப் கால்பந்து போட்டிகளில் அவரை தொடர்ந்து காண முடியும் என்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

