சச்சின் சாதனையை முறியடித்த சூர்யவன்ஷி!
இந்திய கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. வெறும் 15 வயதில் இந்திய சீனியர் அணிக்காக சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாகி, 36 ஆண்டுகளாக நீடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் மான்செஸ்டரில் களமிறங்கிய அவர், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகளை சேர்த்து பார்த்தாலும், மிக இளம் வயதில் சர்வதேச போட்டியில் அறிமுகமான வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 16 வயது 205 நாட்களில் இந்திய அணிக்காக அறிமுகமாகியிருந்தார். பெண்கள் அணியில் ஷஃபாலி வர்மா 15 வயது 239 நாட்களில் அறிமுகமானதே சாதனையாக இருந்தது. அந்த இரண்டு சாதனைகளையும் தற்போது சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தாலும், தொடக்கப் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காத சூர்யவன்ஷிக்கு, சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மாவின் தடுமாற்றத்துக்குப் பிறகு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வாய்ப்பு வழங்கினர். அவருக்கு திலக் வர்மா அறிமுகத் தொப்பியை வழங்கினார்.
ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 776 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்ற சூர்யவன்ஷி, 72 சிக்ஸர்களுடன் MVP மற்றும் Emerging Player விருதுகளையும் கைப்பற்றினார்.
இதுவரை 34 டி20 போட்டிகளில் 1,477 ரன்களை 220.44 என்ற அதிரடி ஸ்டிரைக் ரேட்டில் குவித்துள்ள வைபவ் சூர்யவன்ஷி, இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டாராக உருவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

