மகளிருக்காக தமிழக முதல்வர் விஜயின் முக்கிய அறிவிப்புகள்

விஜயின் முக்கிய அறிவிப்புகள்

விஜயின் முக்கிய அறிவிப்புகள்: மகளிருக்கு இலவச சிலிண்டர், பேருந்து பயணம்மகளிரை கவரும் வகையில், மாதந்தோறும் ரூ.2,500 உரிமைத்தொகை, ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள், அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை தேர்தல் பிரசாரத்தின்போது முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். இந்த வாக்குறுதிகள் அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் வாக்குறுதிகள் எப்போது செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே நிலவி வந்த நிலையில், மகளிரை நேரடியாகப் பயனடையச் செய்யும் இரண்டு முக்கிய திட்டங்களுக்கான அறிவிப்பை முதலமைச்சர் விஜய் இன்று சட்டப்பேரவையில் வெளியிட்டார்.

3 துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர் விஜய், எரிவாயு தட்டுப்பாட்டால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு, ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 விலையில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்த திட்டத்தின் கீழ் சிலிண்டருக்கான தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். மொத்தம் 1 கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 104 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்திற்கும் குறைவான வருமானம் கொண்ட குடும்பங்கள் இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்கள் என முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.4,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முதல் திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, ‘மகளிர் வெற்றி பயணம்’ திட்டத்தின் விரிவாக்கத்தையும் முதலமைச்சர் அறிவித்தார். இதன்படி, மாநகர மற்றும் நகரப் பகுதிகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ். மற்றும் டீலக்ஸ் அரசு பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளலாம். இந்த விரிவாக்கத் திட்டம் மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்யும் வகையில் புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரணக் கட்டண அரசு பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற வருமான உச்சவரம்போ, பயணங்களின் எண்ணிக்கைக்கான கட்டுப்பாடோ இருக்காது என்றும் முதலமைச்சர் கூறினார்.

மகளிர் வெற்றி பயணத் திட்டத்தின் விரிவாக்கத்திற்காக ஆண்டுதோறும் சுமார் ரூ.6,000 கோடி செலவாகும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், இத்திட்டத்தின் கீழ் திருநங்கைகளும் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளலாம் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *