6 வாக்குச்சாவடிகளில் முறைகேடா? கொளத்தூர் வெற்றியை எதிர்த்து ஸ்டாலின் வழக்கு!
சென்னை கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது இடம் பிடித்த மு.க.ஸ்டாலின் தரப்பில் தேர்தல் முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தை நாடப்பட்டுள்ளது.
ஸ்டாலின் அளித்த விண்ணப்பத்தின் அடிப்படையில் கொளத்தூர் தொகுதியில் 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சரிபார்ப்பின்போது சில வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீரென கோளாறாகி நின்றதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், 6 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளையும் VVPAT ஒப்புகைச் சீட்டுகளையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டதாக ஸ்டாலின் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த முறைகேடுகள் தொடர்பாக வெளிப்படையான சரிபார்ப்பு நடைமுறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்றும், கொளத்தூர் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT-களையும் முழுமையாக சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
மேலும், வி.எஸ்.பாபுவின் வெற்றியை செல்லாது என அறிவித்து, தன்னை கொளத்தூர் தொகுதியின் வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

