ரியோ ராஜ் பேச்சால் வெடித்த சர்ச்சை.. பெண்ணியம் குறித்து என்ன சொன்னார்?
சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், சீரியல் நடிகராகவும் தனது பயணத்தைத் தொடங்கிய ரியோ ராஜ், ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து ‘பிளான் பண்ணி பண்ணணும்’, ‘ஜோ’, ‘ஸ்வீட் ஹார்ட்’, ‘ஆண் பாவம் பொல்லாதது’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘ராம் அண்ட் லீலா’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
கடந்த 21ஆம் தேதி வெளியான ‘ராம் அண்ட் லீலா’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகளுக்காக ரியோ ராஜ் அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பேட்டியில், ‘ஆண் பாவம் பொல்லாதது’ திரைப்படத்திற்கு பெண்ணியவாதிகள் மத்தியில் எழுந்த எதிர்ப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரியோ, “பெண்ணியவாதிகளை நாங்கள் விமர்சிக்கவில்லை. பெண்ணியம் என்றால் என்னவென்றே தெரியாமல் அதுகுறித்து கருத்து கூறும் பெண்களைப் பற்றித்தான் அந்தப் படம் பேசியது” எனக் கூறினார்.
மேலும், தனது தாயை உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், “எனது தாய்தான் மிகவும் தைரியமான பெண். தனி ஆளாக நின்று என்னைப் படிக்க வைத்தார். அவர் பெண்ணியம் பேசவில்லை; பெண்ணியவாதியாக வாழ்ந்து காட்டினார்” எனத் தெரிவித்தார்.
இதற்கு இடையே, “பெண்களின் வலிமையை தாய்மைக்குள் மட்டுமே ஏன் புகுத்துகிறீர்கள்? அதுமட்டும்தான் வலிமையா?” எனத் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து தனது கருத்தை விளக்கிய ரியோ, “பெண்ணியம் என்பது ஒரு உணர்வு. தங்களது கொள்கைகளிலும், முடிவுகளிலும் அழுத்தமாக நிற்கும் அனைத்துப் பெண்களும் தைரியமானவர்கள்தான்” எனக் கூறினார்.
மற்றொரு பகுதியில், விவாகரத்து தொடர்பாக காவல் நிலையத்தை அணுகும் பெண்களைப் பற்றியும் அவர் கருத்து தெரிவித்தார். சில பெண்கள் சட்டம் வழங்கியுள்ள பாதுகாப்பை தவறாகப் பயன்படுத்துவதால், விவாகரத்து வழக்குகளில் ஆண்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுவதாக அவர் கூறினார். மேலும், “பெண்ணியம் என்பது ஓர் உணர்வுதான்; அதற்கு வரையறையோ, கோட்பாடோ கிடையாது” என்றும் தெரிவித்தார்.
ரியோவின் இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் இருவேறு கருத்துகள் எழுந்துள்ளன. சிலர், பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டப் பாதுகாப்பு தவறாகப் பயன்படுத்தப்படும் சம்பவங்களையும் பேச வேண்டியது அவசியம் எனக் கூறி ரியோவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரத்தில், பெண்ணியம் என்பது பெண்களின் உரிமைகள் மற்றும் சமத்துவத்திற்காகப் போராடும் சமூக இயக்கம் என்றும், அதுகுறித்த ரியோவின் புரிதல் தவறானது என்றும் மற்றொரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.
இதனால், ரியோ ராஜின் பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இருவேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது.

