கருப்புச் சட்டையில் திமுக கவுன்சிலர்கள்! முதல்வர் விஜய்க்கு மேயர் பிரியா கடிதம்

சென்னை மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்று வரும் நிலையில், திமுக கவுன்சிலர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்து தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாநகராட்சியின் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியை தமிழக அரசு போதுமான அளவில் விடுவிக்கவில்லை என்றும், கவுன்சிலர்களுக்கான வார்டு மேம்பாட்டு நிதியும் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து பேசிய துணை மேயர் மகேஸ் குமார், “மாநகராட்சியின் பல்வேறு திட்டங்கள் நிதி இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளன. வேளச்சேரி மேம்பாலம் உள்ளிட்ட முக்கியத் திட்டங்களும் முடங்கியுள்ளன. ஒப்பந்ததாரர்களுக்கான பணப்பில்கள் கூட நிலுவையில் உள்ளன” என்றார்.

மேலும், சென்னையில் மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்படும் அம்மா உணவகங்களுக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் செலவிடப்படுவதாகவும், காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும் தனியார் நிதி பெறும் பள்ளிகளுக்கு உணவு எடுத்துச் செல்லும் வாகனச் செலவையும் மாநகராட்சியே ஏற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

“தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருப்பதாகக் கூறி ரூ.21,000 கோடி கடன் பெற்று திட்டங்களை செயல்படுத்துகிறது. எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்குவது உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகின்றன. அதேபோல் சென்னை மாநகராட்சிக்கும் சிறப்பு நிதியை தமிழக அரசு விடுவிக்க வேண்டும்” என மகேஸ் குமார் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக மேயர் பிரியா, இரண்டு நாட்களுக்கு முன்பே முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாநகராட்சிக்கு தேவையான நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியே திமுக கவுன்சிலர்கள் கருப்புச் சட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்றதாக துணை மேயர் மகேஸ் குமார் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *