சப்-இன்ஸ்பெக்டரை நாயை ஏவி கடிக்க வைத்த தம்பதி…
குமரி மாவட்டத்தில் பணம் மோசடி வழக்கில், குற்றவாளிகளைக் கைது செய்யச் சென்ற சப்-இன்ஸ்பெக்டரை வளர்ப்பு நாயை ஏவிக் கடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் மேல நெய்யூர் சிராயன்விளை பகுதியைச் சேர்ந்த கிரேட் பிரின்ஸ் ராஜ் (31) என்ற ஜவுளி வியாபாரி, தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகத் தனது குடும்பச் சொத்தைப் பெற்றுத் தருமாறு தனது உறவினரான கிருஷ்ணவேணி மற்றும் அவரது கணவர் நாகசுமன் (26) ஆகியோரை அணுகியுள்ளார்.
ஆனால் அந்தத் தம்பதியினர் சொத்தை மீட்டுத் தருவதாகக் கூறி, கிரேட் பிரின்ஸ் ராஜிடமிருந்து தவணை முறையில் 5 லட்சத்து 93 ஆயிரத்து 390 ரூபாய் மற்றும் ஒரு காரைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஜவுளி வியாபாரி ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், முதற்கட்டமாக காரை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், தம்பதியினர் தோவாளையில் உள்ள தங்களது வீட்டில் தலைமறைவாக இருப்பதாகக் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பச்சமால், சப்-இன்ஸ்பெக்டர் அனுஜன் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகசுமனைச் கைது செய்ய முயன்றனர். ஆனால் அவரது மனைவி கிருஷ்ணவேணி காவல் துறையினரைத் தடுத்து நிறுத்தி, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அச்சமயத்தில், கிருஷ்ணவேணி தன்னுடைய நாயைக் காவல் துறையினர் மீது ஏவியுள்ளார். அந்த நாய் சப்-இன்ஸ்பெக்டர் அனுஜனைத் திடீரெனக் கடித்ததில், அவருக்குக் கையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது.
இதனால் இவர்களின் மீது ,சப்-இன்ஸ்பெக்டரைக் நாயை ஏவி கடிக்க வைத்தது, அரசுப் பணியைச் செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இருவரையும் காவல் துறையினர் சம்பவ இடத்திலேயே அதிரடியாகக் கைது செய்தனர். கைதான நாகசுமன் மீது ஏற்கனவே மதுரை தெப்பக்குளம், அண்ணா நகர், நீலகிரி மாவட்ட ஊட்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஆகிய பல்வேறு காவல் எல்லைகளில் பல மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

