எஸ்.ஜே சூர்யாவின் படப்பிடிப்பில் விபத்து…ஒருவர் பலி!
பல்வேறு வெற்றி படங்களைக் கொடுத்த எஸ்.ஜே. சூர்யா,தற்போது ‘கில்லர்’ என்னும் படத்தை இயக்கி நடித்து வருகிறார். பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஓட்டேரி பகுதியில் உள்ள பி&சி மில் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் இப்படப்பிடிப்பில் பல தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தபோது, அங்கிருந்த கேஸ் பலூன் சிலிண்டர் திடீரென வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழில்நுட்ப கலைஞராக பணியாற்றி வந்த மதுரவாயலைச் சேர்ந்த மதன் (26) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், குன்றத்தூரைச் சேர்ந்த சக்திவேல் (27), மதுரவாயலைச் சேர்ந்த சூர்யா (23), நெற்குன்றத்தைச் சேர்ந்த தினகரன் (24) ஆகியோர் காயமடைந்தனர்.
உடனடியாக அருகில் இருந்த சக ஊழியர்கள் நால்வரையும் மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மதனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். காயமடைந்த சக்திவேல், சூர்யா மற்றும் தினகரன் ஆகிய மூவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

