முடிவுக்கு வந்தது ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவு….
ஜூன் 11ஆம் தேதி கனடா, மெக்ஸிகோ மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் 2026 ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், போர்ச்சுகல் அணியின் 2026 உலகக்கோப்பை பயணம் முடிவுக்கு வந்துள்ளது. காலிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் போர்ச்சுகல் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
2006ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் முதன்முறையாக களமிறங்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2026 உலகக்கோப்பையே தனது கடைசி உலகக்கோப்பை தொடராக இருக்கும் என்று போட்டிக்கு முன்பே அறிவித்திருந்தார். இதன் மூலம், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக போர்ச்சுகல் அணியை வழிநடத்திய ஜாம்பவான் ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவு நிறைவுக்கு வந்துள்ளது.
உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், போர்ச்சுகல் தேசிய அணியில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவது குறித்து அவர் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. தற்போது சவுதி அரேபியாவின் அல்-நாசர் (Al-Nassr) கிளப் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, கிளப் கால்பந்தில் தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
41 வயதான ரொனால்டோ, தொடர்ந்து 6 உலகக்கோப்பைத் தொடர்களில் (2006, 2010, 2014, 2018, 2022, 2026) விளையாடி, அந்த ஆறு உலகக்கோப்பைத் தொடர்களிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். மேலும், போர்ச்சுகல் அணிக்காக இதுவரை 232 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 146 சர்வதேச கோல்களுடன் உலகச் சாதனையையும் தக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

