ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் – அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பு!

ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் – அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று சமூகநீதித் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் பேசிய சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு, துறையின் சார்பில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது, தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காக தனிச்சட்டம் இயற்றப்படும் என சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

வன்கொடுமைக்கு எதிராக ஏற்கனவே சட்டங்கள் இயற்றப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், சமத்துவம் மற்றும் சமூகநீதியை நிலைநாட்டி, அனைவரும் இணக்கமாக வாழும் சூழலை உருவாக்க அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாகத் தெரிவித்தார்.

இருப்பினும், காதலித்ததற்காக சொந்தப் பிள்ளைகளையே கொலை செய்யும் கொடூரமான போக்கு சமூகத்தில் தொடர்ந்து நிலவி வருவதாக அவர் வேதனை தெரிவித்தார்.

ஆணவப்படுகொலைகளைத் தடுப்பதற்கான சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற அரசியல் கட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, நீதிபதி கே.என். பாட்ஷா தலைமையில் முந்தைய திமுக ஆட்சியில் குழு அமைக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அந்தக் குழு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி, அவர்களின் கருத்துகளைப் பெற்று அறிக்கை தயாரிக்க வேண்டியுள்ளதால், அதன் பதவிக்காலம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

“பாட்ஷா குழுவின் பரிந்துரைகள் பெறப்பட்டவுடன், ஆணவப்படுகொலைகளைத் தடுப்பதற்கான சிறப்புச் சட்டம் இயற்றப்படும். இதனை திறந்த மனதோடு அறிவிக்கிறேன்” என அமைச்சர் வன்னி அரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *