டிவி தொகுப்பாளரின் மண்டையை உடைத்த திமுகவினர்

காரைக்குடியில் நடந்த தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கலவரத்தில் தொகுப்பாளர் மற்றும் செய்தியாளரின் மண்டை உடைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி பிரமுகர்களை மக்கள் மத்தியில் பேசவைக்கும் விவாத நிகழ்ச்சிகளை தனியார் செய்தி நிறுவனங்கள் மும்முரமாக நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில் நேற்று மாலை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மகர் நோன்பு திடலில் நியூஸ் தமிழ் தொலைக்காட்சி சார்பில் விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில், திமுக சார்பில் பங்கேற்ற சிவகங்கை மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் தமிழக அரசின் சாதனைகளை விளக்கி பேசினார். முந்தைய அதிமுக ஆட்சியின் சாதனைகளை முன்னாள் எம்எல்ஏ உமாதேவன் எடுத்துரைத்து பேசினார். நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி பேசும்போது, காரைக்குடி தொகுதியில் பல்வேறு மக்கள் பிரச்சனைகள் இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், காங்கிரஸ் எம்எல்ஏ மாங்குடி குறித்தும், திமுக அரசு குறித்தும் அவர் விமர்சனங்களை முன்வைத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த திமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள், இடும்பாவனம் கார்த்தியை நோக்கி சேர், கற்களை எறிந்தனர். இதனால் திமுக, காங், நாதக-வினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரை ஒருவரை மாறி மாறி கடுமையாக தாக்கிக்கொண்டனர். இதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜேஷ் மற்றும் செய்தியாளர் சதாம் உசேன் ஆகியோரின் மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திமுகவினர் திட்டமிட்டே இத்தாக்குதலை நடத்தியதாக இடும்பாவனம் கார்த்தி குற்றம்சாட்டியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *