தமிழின அழிப்பு நினைவு நாள்: MLA ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையில் 1000க்கும் மேற்பட்டோர் அமைதிப் பேரணி

“இளைய தலைமுறைக்கு ஈழப் படுகொலை வரலாறு தெரிய வேண்டும்” – ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வேண்டுகோள்!

மே 18 – தமிழின அழிப்பு நினைவு நாளை முன்னிட்டு லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும், காமராஜ் நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ் சார்லஸ் மாட்டின் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் லட்சிய ஜனநாயக கட்சியை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்து தொடங்கிய பேரணியானது அண்ணா சாலை மார்க்கமாக சென்று, ராஜா தியேட்டர் சிக்னல் – நேரு வீதி வழியாக மிஷன் வீதியில் உள்ள மாதா கோவில் எதிரில் நிறைவடைந்தது. தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி தமிழின அழிப்பு போரில் உயிர்நீத்த மக்களுக்கு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும், காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஜோஸ் சார்லஸ் மாட்டின் அவர்கள், மே 18 நமது தொப்புள் கொடி உறவுகள் ஈழத் தமிழர்கள் இலங்கையில் உயிரிழந்த நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.‌
இன்று இருக்கின்ற இளைய தலைமுறையினருக்கு ஈழத்தமிழர் இனப்படுகொலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த அமைதி ஊர்வலம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடத்தப்பட்டது.‌ இலங்கையில் நடைபெற்ற போரின் போது ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஈழத்தமிழர் படுகொலை குறித்து ஐ.நா சபையில் எடுத்துரைக்கப்பட்டு, அவர்களுக்கான உரிமை குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த அமைதி ஊர்வலத்தில் நாம் தமிழர் கட்சியினரும் கலந்து கொண்டனர் என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், அமைச்சர் பதவி கேட்டு வலியுறுத்தி உள்ளோம். அமைச்சர் பதவி கொடுத்தால் இறைவன் கொடுத்த வழி.‌ அது நடந்தால் நல்லது. நடக்காவிட்டாலும் அதைப்பற்றி வருத்தப்பட போவதில்லை.‌ மக்களுக்காக பணி செய்ய வந்துள்ளோம். தொடர்ந்து மக்களுக்கான சேவைகளை செய்வோம். காமராஜ் நகர் தொகுதியை முன்மாதிரியான தொகுதியாக எடுத்து பணியாற்றி வருகிறோம். அண்மையில் பெய்த மழையின் போது தேங்கி நின்ற மழைநீரை ஜேசிபி மற்றும் மின்மோட்டார் வைத்து உடனுக்குடன் வெளியேற்றினோம். தொடர்ச்சியாக தூர்வாரி மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்கிறோம்.‌ பிளாஸ்டிக் கழிவுகள் மழை நீர் வடிகால்களில் அடைத்து, மழைநீர் தேங்கும் நிலை உள்ளது. மக்களும் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டு, பிளாஸ்டிக் கழிவுகளை வாய்க்கால்கள் மற்றும் நீர் நிலைகளில் போடக்கூடாது.‌ மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் கண்டிப்பாக ஒரு மாற்றத்தை கொண்டு வரலாம் என வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *