காமராஜர் கல்வீடு திட்ட நிதி வாங்கி வீடு கட்டாதவர்களுக்கு வாய்ப்பு
புதுச்சேரி அரசின் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தின்கீழ் நிதி பெற்று வீடு கட்டாமல் உள்ளவர்கள் அரசிடம் இருந்து வாங்கிய பணத்தை 6 மாத காலத்துக்குள் சிறிய அபராதத்துடன் திரும்ப செலுத்தினால் போதும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழ்வாழும் வீடற்ற ஏழைகள் வீடு கட்டிக்கொள்வதற்காக பெருந்தலைவர் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
2003-04 நிதி ஆண்டில் இருந்து புதுச்சேரி அரசின் நகர மற்றும் கிராம அமைப்புத் துறையின்கீழ், குடிசை மாற்று வாரியம் இந்த திட்டத்தை நிறைவேற்றுகிறது.
வீடுகளின் கட்டுமான நிலைகள் அடிப்படையில் இந்த திட்டத்திற்கு அரசு 3 தவணைகளாக நிதி உதவி அளிக்கிறது. அதே சமயம் நிதி பெற்று வீடு கட்டி முடிக்காமல் இருக்கும் பயனாளிகளிடம் இருந்து, அரசு கொடுத்த பணத்தை வட்டியுடன் திரும்ப பெறும் விதிகளும் இந்த திட்டத்தில் உள்ளன.
அப்படி செய்தால் மட்டுமே பயனாளிகள் அவர்களுடைய மனைப்பட்டா, நில பத்திரங்களை அரசிடம் இருந்து திரும்ப பெற முடியும்.
இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் அரசின் நிதிஉதவியைப் பெற்று சுமார் 8 ஆயிரத்து 600 பயனாளிகள் வீடு கட்டும் பணிகளை தொடங்காமலும், முழுமையாக வீடுகளை கட்டி முடிக்காமலும் உள்ளனர்.
இது குறித்து புதுச்சேரி அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோது, பயனாளிகள் அவர்கள் பெற்ற பணத்துடன் வெறும் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தினால் போதும்; அவர்களுக்கு மனைப்பட்டா மற்றும் நிலப்பத்திரம் திருப்பி கொடுக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், நிதி பெற்று வீடு கட்டாமல் இருக்கும் சுமார் 8 ஆயிரத்து 600 பயனாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 6 மாத காலத்துக்குள் முழு தொகை மற்றும் 3 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால் குடிசை மாற்று வாரியம் மூலம் வட்டியுடன் முழு நிதியும் வசூலிக்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

